ADDED : ஜூன் 27, 2024 09:26 PM

பாலக்காடு : பாலக்காடு அருகே, அட்டப்பாடி நெல்லிப்பதியில் சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி நெல்லிப்பதி பகுதியைச் சேர்ந்த மணி-கமலாக் ஷி தம்பதியரின் வாரிசுகள் பிரபாகரன், சிவனுண்ணி 46, சியாமளா.
17 ஆண்டுகளுக்கு முன் தாய், சகோதரி மற்றும் சகோதரியின் நான்கு வயது மகள் அனிதா ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள பிரபாகரன் தான் காரணம் என குற்றம்சாட்டி, அவரது சகோதரர் சிவனுண்ணி அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில், 2016 ஜூலை 18ம் தேதி இரவு வேலைக்கு சென்று திரும்பி வரும் வழியில், வீட்டின் அருகே பிரபாகரனை சிவனுண்ணி கத்தியால் சரமாரியாக குத்தினர். படுகாயம் அடைந்த பிரபாகரனின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்து தடுக்க முயன்ற அவரது மனைவி விஜயாவையும் சிவனுண்ணி கத்தியால் குத்தினார்.
இவர்கள் கூச்சலிட்டதும் சப்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரபாகரன் இறந்தார்.
அகளி போலீசார், சிவனுண்ணியை கைது செய்து விசாரணை நடத்தினர். குற்ற பத்திரிக்கை சமர்ப்பித்த இந்த வழக்கு விசாரணை மண்ணார்க்காடு பழங்குடியின சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
குற்றவாளிக்கு, ஆயுள் தண்டனையும், இரு பிரிவுகளில் மொத்தம், 1.50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜோமோன் ஜோன் தீர்ப்பளித்தார்.
அபராத தொகையில் 50 ஆயிரம் ரூபாயை, பிரபாகரின் மனைவி மற்றும் மகனுக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டனர். அரசு தரப்பு வழக்கறிஞராக ஜெயன் ஆஜரானார்.