/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எச்.எம்.பி.வி., வைரஸ் அச்சம் வேண்டாம்; முக கவசம் அணிந்தால் தடுக்கலாம்: டீன்
/
எச்.எம்.பி.வி., வைரஸ் அச்சம் வேண்டாம்; முக கவசம் அணிந்தால் தடுக்கலாம்: டீன்
எச்.எம்.பி.வி., வைரஸ் அச்சம் வேண்டாம்; முக கவசம் அணிந்தால் தடுக்கலாம்: டீன்
எச்.எம்.பி.வி., வைரஸ் அச்சம் வேண்டாம்; முக கவசம் அணிந்தால் தடுக்கலாம்: டீன்
ADDED : ஜன 08, 2025 07:02 AM
சேலம்: எச்.எம்.பி.வி., வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என, சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி டீன் தேவிமீனாள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, டீன் மற்றும் பொது மருத்துவத்துறை தலைவர் சுரேஷ்கண்ணா ஆகியோர் கூறியதாவது:
குளிர்காலத்தில் பரவக்கூடிய, எச்.எம்.பி.வி., வைரஸ், சுவாச மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டது. இது, 2001ல் இருந்து இருக்கிறது. மழை, குளிர் காலங்களில் சளி, காய்ச்சல், இன்ப்ளூயன்ஸா உள்ளிட்ட வைரஸ் தாக்குதல் போன்று, எச்.எம்.பி.வி., பாதிப்பும் வரும். தற்போது, இதன் பாதிப்பு சீனாவில் அதிகரித்துள்ளதால், உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. கொரோனா போன்று, பெரிய பாதிப்பு வரும் என்ற அச்சம், மக்களிடம் நிலவுகிறது. அது போன்ற மோசமான பாதிப்புகளை, எச்.எம்.பி.வி., ஏற்படுத்தாது. அதனால் அச்சப்பட வேண்டாம்.
இந்த வைரஸ் தாக்கத்தால் சளி, காய்ச்சல், உடல் வலி போன்ற பாதிப்புகள், 4 முதல், 9 நாட்கள் வரை நீடிக்கும். முதியோர், குழந்தைகளை பாதிக்கும் சூழல் உள்ளது. குறிப்பாக நீரிழிவு, ஆஸ்துமா, கேன்சர் போன்ற இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த வைரஸூக்கு என, தனி மருந்து, மாத்திரைகள் கிடையாது. வழக்கமாக உட்கொள்ளும், 'பாராசிட்டமால்' போன்ற ஆன்டிகோல்டு மாத்திரைகள் போதும். சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். பாதிப்பை தடுக்க அடிக்கடி கை கழுவுதல், முக கவசம் அணிதல், பொது இடத்தில் அதிகம் கூடுவதை தவிர்த்தல் வேண்டும்.
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை, வி.ஆர்.டி.எல்., வைரஸ் கண்டறியும் பரிசோதனை வசதிகள் இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்க வசதிகள் உள்ளன. முடிந்த வரை மக்கள், முக கவசம் அணிந்து செல்வது நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.