/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பில்லிங் மிஷினில் சார்ஜ் நிற்காததால் கண்டக்டர்கள் தவிப்பு
/
பில்லிங் மிஷினில் சார்ஜ் நிற்காததால் கண்டக்டர்கள் தவிப்பு
பில்லிங் மிஷினில் சார்ஜ் நிற்காததால் கண்டக்டர்கள் தவிப்பு
பில்லிங் மிஷினில் சார்ஜ் நிற்காததால் கண்டக்டர்கள் தவிப்பு
ADDED : செப் 19, 2025 02:08 AM
திருப்புவனம்: தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் புதிதாக வழங்கப்பட்டுள்ள பில்லிங் மிஷினில் சார்ஜ் எளிதில் குறைந்து விடுவதால் டிக்கெட் வழங்க முடியாமல் கண்டக்டர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ஸ்டேட் வங்கியுடன் இணைந்து அரசு பஸ்களில் புதிய நவீன பில்லிங் மிஷின்கள் வழங்கப்பட்டன. கையடக்கமாகவும் அதி நவீன வசதிகளும் இருப்பதால் விரைவாக டிக்கெட் வழங்க முடியும், அனைத்து பில்லிங் மிஷின்களும் கணினியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் தினசரி அரசு பஸ்களில் பயணிப்பவர்கள் பற்றிய விபரம், வசூலாகும் தொகை உள்ளிட்டவற்றை உடனுக்குடன் சரி பார்க்கலாம்.
மிஷினில் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து பணமில்லா பரிவர்த்தனையும் மேற்கொள்ளலாம். முதல் கட்டமாக தொலை துார பஸ்களில் அறிமுகப்படுத்தப்பட்டு அதன்பின் டவுன் பஸ்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் ஒருசில நாட்களிலேயே மிஷினில் சார்ஜ் விரைவில் குறைவதாக கண்டக்டர்கள் புகார் தெரிவித்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து அனைத்து பஸ்களிலும் சார்ஜ் வசதி செய்யப்பட்டது.
பவர் பின் மற்றும் யூஎஸ்பி கேபிளை பயன்படுத்தி சார்ஜ் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் சார்ஜ் ஒரு மணி நேரம் கூட இருப்பதில்லை என கண்டக்டர்கள் புலம்புகின்றனர். காரைக்குடி கோட்டம் சார்பாக சிவகங்கை, பரமக்குடி, கமுதி உள்ளிட்ட 11 பணிமனைகள் மூலம் 400க்கும் மேற்பட்ட டவுன் பஸ்களும் 200க்கும் மேற்பட்ட தொலை துார பஸ்களும் இயக்கப்படுகின்றன.
மதுரை- - ராமேஸ்வரம் வழித்தடத்திலும் காரைக்குடி கோட்ட பஸ்கள் தான் அதிகளவில் இயக்கப்படுகின்றன. பரமக்குடியில் சார்ஜ் செய்து டிக்கெட் போட ஆரம்பித்தால் மானாமதுரை கடந்த உடன் சார்ஜ் காலியாகி விடுகிறது. இதனால் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. முகூர்த்தம் மற்றும் திருவிழா நாட்களில் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்படும் நாட்களில் டிக்கெட் போட முடிவதில்லை. அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. பலமுறை இதுகுறித்து போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் புகார் செய்தும் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கண்டக்டர்கள் புலம்புகின்றனர்.