/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாய் சீரமைப்பு பணி 16 இடங்களில் மும்முரம்
/
கால்வாய் சீரமைப்பு பணி 16 இடங்களில் மும்முரம்
ADDED : செப் 19, 2025 02:47 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், வெள்ள பெருக்கால், விளை நிலங்கள் ஒவ்வொரு ஆண்டும் மூழ்கி, விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதை தவிர்க்கும் வகையில், 20 ஆண்டுகளுக்கு பின், மாவட்டத்தில் 16 இடங்களில், 133 கி.மீ., துாரத்திற்கு, கால்வாய் சீரமைக்கும் பணியில், மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், 47 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 2.80 லட்சம் ஏக்கர் பரப்பளவில், நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.
பருவமழை
ஆரணி, கொசஸ்தலை மற்றும் கூவம் ஆறு மற்றும் ஏரி, கிணறு போன்றவற்றின் வாயிலாக, விவசாய பணிகளுக்கு தேவையான நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை, திடீர் புயல், மழை போன்றவை அதிகமாக இருக்கும் சமயத்தில், பல ஆயிரக்கணக்கான விளை நிலங்களில், வெள்ள நீர் புகுந்து விடுகிறது. இதனால், விவசாயிகள் பெருமளவில் நஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். இதற்கு, மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களைச் சுற்றிலும், போதிய, வடிகால்வாய் வசதி இல்லாதது தான் காரணம்.
இருக்கும் வடிகால்வாய்களும், செடிகள் வளர்ந்துள்ளன. கடந்த, 20 ஆண்டுகளாக கால்வாய் சீரமைக்காததால், அவைகள் துார்ந்து, தண்ணீர் வெளியேற வழியில்லாமல், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு புகுந்து விடுகிறது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில், மழை காலங்களில், விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கும், 16 இடங்கள் கண்டறியப்பட்டன. அதை கலெக்டர் தலைமையில், வருவாய், வேளாண், நீர்வளத் துறை ஆகியவை இணைந்து, துார் வாரி, சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் கூறியதாவது:
மாவட்டத்தில், கடம்பத்துார், திருவாலங்காடு, திருத்தணி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி ஒன்றியங்களில், ஒவ்வொரு மழை காலத்திலும், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விடுகின்றன.
இதனால், விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மீஞ்சூர், அயநல்லுார், ரெட்டம்பேடு, மெதுார், குமரஞ்சேரி, பெரும்பேடு, வழுதலம்பேடு உள்ளிட்ட பகுதிகளில், அதிகளவில் விவசாயிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், வேளாண்மை, வருவாய் மற்றும் நீர்வளத்துறையினர் ஒருங்கிணைந்து கணக்கெடுப்பு நடத்தி, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கும் இடங்களாக, 16 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
நீர்பிடிப்பு
அந்த பகுதிகளில், மழைநீர் வெளியேறும் வரத்து கால்வாய், துார், வாரி சீரமைக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், 16 இடங்களில், 133 கி.மீ., துாரத்திற்கு துார் வாரும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை, 55 கி.மீட்டர் துாரத்திற்கு, கால்வாய் துார் வாரி, சீரமைக்கப்பட்டுள்ளது.
இப்பணி நிறைவடையும் பட்சத்தில், வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில், அதிகளவில் மழை பெய்தாலும், கால்வாய் வழியாக இணைக்கப்பட்டுள்ள, ஏரிகள் மற்றும் ஆற்றுக்குள் தண்ணீர் சென்று விடும்.
மேலும், இனிவரும் காலங்களில், சீரமைக்கப்பட்ட கால்வாய் அருகில், நிலத்தடி நீர்பிடிப்பு திறன் அதிகரிக்கும். அப்பகுதிகளில் உள்ள, 25,000க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் வெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.