sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்... என்னாச்சு?: ஆறு மாதங்களாக காத்திருக்கும் மக்கள் அதிருப்தி

/

மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்... என்னாச்சு?: ஆறு மாதங்களாக காத்திருக்கும் மக்கள் அதிருப்தி

மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்... என்னாச்சு?: ஆறு மாதங்களாக காத்திருக்கும் மக்கள் அதிருப்தி

மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்... என்னாச்சு?: ஆறு மாதங்களாக காத்திருக்கும் மக்கள் அதிருப்தி


ADDED : ஜூலை 28, 2024 02:06 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்:மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, கடல் நீரை குடிநீராக்கும் புதிய திட்டத்தை சட்டசபையில் அறிவித்து, ஆறு மாதங்கள் ஆன நிலையில் அதற்கான எந்த பணிகளும் நடைபெறாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், அனுப்பம்பட்டு, திருவெள்ளவாயல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளது.

மேற்கண்ட கிராமங்களுக்கு சிறுவாக்கம் கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில், 47ஆழ்துளை கிணறுகள் அமைத்து, கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

குடிநீர் வினியோகம்


இதில் அத்திப்பட்டு கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, 48 கிராமங்கள், அனுப்பம்பட்டு கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, 55கிராமங்கள் என மொத்தம், 103 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.

மேற்கண்ட, 103 கிராமங்களுக்கு தினமும், 22.50 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில், இதுபோதுமானதாக இல்லை.

கிராமங்களின் குடிநீர் தேவையில், 50 சதவீதத்திற்கும் குறைவாகவே வினியோகம் உள்ளது.

அதேபோன்று மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, சீமாவரம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. மீஞ்சூர் பகுதிக்கு தினமும், 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. தேவையே, 35லட்சம் லிட்டராக உள்ளது.

மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், குடிநீர் தேவை அதிகமாகவும், வினியோகம் குறைவாகவும் உள்ளதால், கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.

மேற்கண்ட பகுதிகளில் உள்ள குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த, பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது, 'மீஞ்சூர் பகுதிக்கு காட்டுப்பள்ளியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் இருந்து, தினமும், 40 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், தேர்வாய்கண்டிகை நீர்தேக்கத்தில் இருந்தும், புதிய கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும்' தெரிவிக்கப்பட்டது.

அதிருப்தி


திட்டம் அறிவிக்கப்பட்டு, ஆறு மாதங்கள் ஆன நிலையில், அதற்கான எந்த முன்னெடுப்புகளும் நடைபெறாமல் இருப்பதுடன் குடிநீர் தட்டுப்பாடும் தொடர்வதால், மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள் அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

ஆரணி மற்றும் கொசஸ்தலை ஆறுகளின் இடைப்பட்ட பகுதியில் மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் உள்ளன. ஆண்டுதோறும், பருவமழையின்போது இரு ஆறுகளில் இருந்தும், 30 டி.எம்.சி.,க்கும் அதிகமான தண்ணீர் பழவேற்காடு கடலுக்கு செல்கிறது.

இதில் சிறிதளவு சேமித்து வைத்தாலே மீஞ்சூர் மக்களின் குடிநீர் தேவையை எளிதாக பூர்த்தி செய்யலாம். இயற்கையாக கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைப்பதற்கான நீண்ட கால திட்டமிடல் இல்லை. அவை கடலுக்கு சென்ற பின், அதை, சுத்திகரித்து வழங்க திட்டமிடுகின்றனர்.

இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தி, குடிநீர் தேவைக்கான திட்டமிடல்களை செய்வதில் அரசு அக்கறைகாட்டவில்லை.

கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில், அதன் உற்பத்தி திறன், 70 - 80 சதவீதம் குறைந்து உள்ளது. இது ஏற்கனவே வினியோகிக்கப்படும் பகுதிகளுக்கே போதுமானதாக இல்லாமல், அங்கு பற்றாக்குறை நிலவுகிறது.

இதில் எப்படி மீஞ்சூருக்கு, தருவார்கள் என தெரியவில்லை. மேற்கண்ட ஆலையின் உற்பத்தி திறனை, 100 சதவீதம் மேற்கொண்டால் மட்டுமே இது சாத்தியம். அதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்ட வேண்டும்.

புழல் ஏரியில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கான வழிவகைகள் உள்ளன. அதற்கு திட்டமிடலாம். கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய்கண்டிகையில் இருந்து கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அது சாத்தியமா என தெரியவில்லை.

சட்டசபையில் அறிவித்து ஆறுமாதங்களாக இப்பகுதியில் அதற்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை.

மேலும் தாமதிக்காமல்,கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், அல்லது அரசு தெரிவித்த புழல், தேர்வாய்கண்டிகை நீர்தேக்கங்கள் வாயிலாக, மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மற்றும் தேர்வாய்கண்டிகை நீர்தேக்கம் ஆகியவற்றின் வாயிலாக மீஞ்சூர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கான, முன்மொழிவு அறிக்கை தயாரித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. ஆய்வு பணிகளும் நடைபெறுகிறது. உரிய நிதிஆதாரம் ஒதுக்கிய பின், புதிய குடிநீர் திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us