/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரைகுறை வடிகால்வாய் ஆவடியில் தொற்று அபாயம்
/
அரைகுறை வடிகால்வாய் ஆவடியில் தொற்று அபாயம்
ADDED : ஜூன் 23, 2025 02:59 AM

ஆவடி::ஆவடி கோவில் பதாகை பிரதான சாலையில், ஒவ்வொரு ஆண்டும் மழையின்போது வெள்ள பாதிப்பு ஏற்படும். அதை தவிர்க்கும் பொருட்டு, கோவில் பதாகை இந்திரா நகர் முதல் கன்னடபாளையம் வரை, 2,300 மீட்டர் துாரத்திற்கு 10.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலையின் இருபுறமும் வடிகால் கட்டப்பட்டது.
வடிகால் கட்டி முடிக்கப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளான நிலையில், இந்திரா நகர் அருகே சாலையில், வடிகால் இணைப்பு கொடுக்காமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளது.
இதனால், கலைஞர் நகர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்திரா நகர் சாலையோரத்தில் குட்டை போல் தேங்கி நிற்கிறது.
அங்கு தொடர்ந்து கழிவுநீர் தேங்குவதால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு தொல்லையும் அதிகரித்து நோய் தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, மழைக்காலம் துவங்கும் முன், நெடுஞ்சாலைத்துறையினர் விடுபட்ட பகுதியில், பணிகளை முடிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.