/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ரவுடி மாமூல் தொல்லை; பார் உரிமையாளர் புகார்
/
ரவுடி மாமூல் தொல்லை; பார் உரிமையாளர் புகார்
ADDED : மே 29, 2025 12:51 AM
துாத்துக்குடி: ரவுடிகள் தொல்லையால் மதுக்கூடம் நடத்த முடியவில்லை என, உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
துாத்துக்குடி, சுப்பையாபுரம் 2வது தெருவில் டாஸ்மாக் கடை, அதனுடன் இணைந்த மதுக்கூடம் உள்ளது. கண்ணன் என்பவர் மதுக்கூட டெண்டர் எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், மதுக்கடைக்கு வருவோரையும், மதுக்கூடத்தில் மது அருந்துவோரையும், சிலர் மிரட்டி பணம் வசூலிப்பதாக அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் கூறியதாவது: டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வருவோரையும், மதுக்கூடத்தில் அமர்ந்து மது அருந்துவோரையும், அண்ணாமலை என்ற ரவுடி தலைமையிலான குழுவினர் தொடர்ந்து மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். பணம் கொடுக்க மறுப்பவர்களை, அவர்கள் தாக்குவதோடு, தகாத வார்த்தைகளால் பேசி அங்கிருந்து விரட்டி விடுகின்றனர். தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதிலும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், தற்போது மதுக்கூடம் நடத்தாமல் மூடிவிட்டேன். டெண்டர் எடுத்தபடி அரசுக்கு பணம் செலுத்துவதால், என் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அசம்பாதவிதம் நடப்பதற்கு முன், காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
உரிமம் பெற்று மதுக்கூடம் நடத்தும் ஒருவர், ரவுடி மாமூல் தொல்லையால் தொழில் செய்ய முடியவில்லை என, போலீசில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.