/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யலில் வெள்ளம்; மக்கள் மகிழ்ச்சி
/
நொய்யலில் வெள்ளம்; மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 28, 2024 12:20 AM

திருப்பூர்;நொய்யல் ஆற்றோரம் ரோடு அமைத்ததால், ஆற்றில் பாயும் புது வெள்ளத்தை பார்த்து ரசித்தபடி, பொதுமக்கள் உற்சாகமாக பயணிக்கின்றனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, பரவலாக பெய்து வருகிறது; கோவை மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்வதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. கடந்த வாரம், சில நாட்கள் மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.
மங்கலம் நல்லம்மன் தடுப்பணை, அணைப்பாளையம் தரைமட்ட பாலம், அணைமேடு தடுப்பணை, அணைக்காடு தடுப்பணைகளில், புது வெள்ளம் ஆர்ப்பரித்தபடி, பாய்ந்தோடியது. இரண்டு நாட்களாக, வெள்ளம் குறைந்திருந்த நிலையில், நேற்று காலை முதல் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதிக அளவு ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளதால், ஆற்றில் பாயும் வெள்ளத்தை முழுமையாக பார்த்து ரசிக்க முடியாது. இருப்பினும், ஆற்றோரமாக அமைத்த நொய்யல் ரோட்டில் பயணிக்கும் மக்கள், புது வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதை பார்த்து, உற்சாகமாக சென்று வருகின்றனர்.
ஆற்றில், புது வெள்ளம் பாய்ந்து கொண்டிருப்பதால், தடுப்பணை ஷட்டர்களை திறந்து, குளம், குட்டைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணியில், தன்னார்வ அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.