/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கட்டடப்பணிகளுக்கு குடிநீர் பயன்பாடு கிராம மக்கள் கொந்தளிப்பு
/
கட்டடப்பணிகளுக்கு குடிநீர் பயன்பாடு கிராம மக்கள் கொந்தளிப்பு
கட்டடப்பணிகளுக்கு குடிநீர் பயன்பாடு கிராம மக்கள் கொந்தளிப்பு
கட்டடப்பணிகளுக்கு குடிநீர் பயன்பாடு கிராம மக்கள் கொந்தளிப்பு
ADDED : ஜூன் 25, 2024 11:44 PM
உடுமலை:உடுமலை செல்லப்பம்பாளையத்தில், கட்டடப்பணிகளுக்கு குடிநீர் பயன்படுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
உடுமலை செல்லப்பம்பாளையம் கிராமத்தில், 200க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. திருமூர்த்தி அணை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் இப்பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
கடைக்கோடி கிராமமாக இருப்பதால், தொடர்ந்து இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை ஏற்படுகிறது. வீடுகளுக்கான குடிநீர் வினியோகம், பத்து நாட்களுக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது.
குடியிருப்புகளுக்கான பொதுக்குழாயில், 5 நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்கப்படுகிறது. ஏற்கனவே குடிநீர் வினியோகத்தில் தட்டுப்பாடு தொடர்ந்து கொண்டு இருக்கும் பட்சத்தில், தற்போது புதிதாக கட்டப்படும் நுாலக கட்டடப்பணிகளுக்கு குடிநீர் பயன்படுத்தியதால் அப்பகுதியினர் கொந்தளித்துள்ளனர்.
இப்பகுதியில் புதிதாக நுாலகம் கட்டும் பணிகள் நடக்கிறது. இந்த கட்டமைப்பு பணிகளுக்கு, அரசு பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள, குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து செல்லும் இணைப்பின் வழியாக, முறைகேடாக குடிநீர் பயன்படுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
கிராம மக்கள் கூறியதாவது:
குடிநீர் தட்டுபாடு பிரச்னைக்கு, பலமுறை புகார் அளித்தாலும் நிரந்தரமான தீர்வு கிடைக்காமல் சிரமப்படுகிறோம். ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம் என யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை.
இந்நிலையில் புதிதாக கட்டடம் கட்டுவதற்கு, கிராமத்தின் பொது மேல்நிலை குடிநீர் தொட்டியிலுள்ள குடிநீரை பயன்படுத்துகின்றனர். பல நாட்களாக இது நடக்கிறது. ஒன்றிய நிர்வாகம் உடனடியாக இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.
ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், 'பிரச்னை குறித்து விசாரித்ததில் போர் தண்ணீரையே கட்டடப்பணிகளுக்கு பயன்படுத்தியதாக கூறினர். இருப்பினும், அந்த இணைப்பையும் துண்டித்து முறையான அனுமதி பெறுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.