/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கன்டெய்னர் தட்டுப்பாடு எதிரொலி:திருப்பூர் ஏற்றுமதியாளருக்காக விருதுநகர் எம்.பி., வேண்டுகோள்
/
கன்டெய்னர் தட்டுப்பாடு எதிரொலி:திருப்பூர் ஏற்றுமதியாளருக்காக விருதுநகர் எம்.பி., வேண்டுகோள்
கன்டெய்னர் தட்டுப்பாடு எதிரொலி:திருப்பூர் ஏற்றுமதியாளருக்காக விருதுநகர் எம்.பி., வேண்டுகோள்
கன்டெய்னர் தட்டுப்பாடு எதிரொலி:திருப்பூர் ஏற்றுமதியாளருக்காக விருதுநகர் எம்.பி., வேண்டுகோள்
ADDED : ஜூலை 14, 2024 12:40 AM
திருப்பூர்;கன்டெய்னர் தட்டுப்பாடு காரணமாகவும், கடும் கட்டண உயர்வு காரணமாகவும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் இருந்து, துாத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னலாடைகள், கப்பலில் ஏற்றிச்செல்ல முடியாமல் காத்திருக்கின்றன.
கன்டெய்னர் தட்டுபாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் (காங்.,), மத்திய கப்பல்துறை அமைச்சர் சர்பனாந்த சொனோவல்-க்கு அனுப்பியுள்ள கடிதம்: குறித்த நேரத்துக்கு சரக்குகளை அனுப்பி வைக்க முடியாமலும், கட்டண உயர்வு காரணமாகவும், ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது, கன்டெய்னர்களுக்கான வாடகை, 2.72 லட்சம் ரூபாயாக இருந்தது, 5.59 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
பெரிய கன்டெய்னர் வாடகை, 3.53 லட்சம் என்பது, 7.26 லட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கப்பல் சரக்கு அனுப்ப முடியாமல், அவசர தேவைக்கு, விமானத்தில் சரக்கு அனுப்பும் சேவையும் உள்ளது. விமான சரக்கு கட்டணமும், கிலோ 332 ரூபாயாக இருந்தது, 561 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதனால், பின்னலாடை உற்பத்தி செலவில், 25 சதவீதம் வரை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிறிய கன்டெய்னர்களில் சரக்கு ஏற்றப்பட்டு, கொழும்பு துறைமுகம் எடுத்துச்செல்லப்படுகிறது.
அங்கு, பெரிய சரக்கு கப்பலில் ஏற்றி, குறிப்பிட்ட நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உற்பத்தியாகும் சரக்கு, சம்பந்தப்பட்ட வர்த்தகரை சென்றடைய, 20 முதல், 30 நாட்களாகும்.
கன்டெய்னர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், உரிய நேரத்துக்கு சரக்கு சென்றடைவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அபரிமிதமான கட்டண உயர்வால், ஏற்றுமதியாளர்களுக்கான நெருக்கடியும் அதிகரித்துள்ளது.
மத்திய அரசு தலையிட்டு, ஏற்றுமதி வர்த்தகம் தடையின்றி நடக்க ஏதுவாக, தேவையான கன்டெய்னர் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கன்டெய்னர் மற்றும் விமான சரக்கு வாடகை கட்டணத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொழும்பு துறைமுகத்தை சார்ந்து சரக்குகளை அனுப்பாமல், நேரடியாக துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்தே, சர்வதேச கப்பல் துறைமுகங்களுக்கு சரக்குகளை அனுப்பி வைக்கும் வசதியை அமல்படுத்த வேண்டும்.
திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், தடையின்றி நடக்க ஏதுவாக, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.