இயற்கையுடன் இணைந்து வாழ்வதே ஆரோக்கியம் தரும். அதற்கான பாதைதான் யோகா. 'தன்னுள் எப்படி வாழ வேண்டும்' என்கிற சாரத்தைப் பயிற்றுவிக்கும் அறிவியல்தான் யோகா. இந்த மருந்தில்லா சிகிச்சை முறை உடல், மனம், ஒழுக்கம், உணர்ச்சி நிலைகள், ஆன்மிகக் கூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. யோகா செய்வதால் தசைகள், எலும்புகள், செல்கள் என உடலின் மொத்த உறுப்புகளும் வலிமை பெறும்.
மன அழுத்தம் நீங்கும்
இன்று நம் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இளம் தலைமுறையை மன அழுத்தம் பீடித்து வதைக்கிறது. யோகா செய்வதால், மன அழுத்தத்தைக் குறைக்கலாம்; அதனால் ஏற்படும் விளைவுகளையும் தடுக்கலாம்.
சூரிய நமஸ்காரம்
யோகாசனங்களில் பிரபலமானது சூரிய நமஸ்காரம். உடலை வளைத்துச் செய்யும் யோகாசனத்தையும் மூச்சை ஒழுங்குபடுத்தும் பிராணாயாமத்தையும் ஒருங்கிணைத்துச் செய்வதுதான் சூரிய நமஸ்காரம். ஒரே ஒருமுறை சூரிய நமஸ்காரம் செய்வதன்மூலம் 8 வகை ஆசனங்களை செய்துவிடலாம்.
சூரியன் இருக்கும் திசையை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்வது சிறப்பு; கண்ணைக் கூசுகிற, சுட்டெரிக்கிற நேரத்தில் செய்யக் கூடாது.