/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில் முன்பதிவு பெட்டியில் கூடுதல் கண்காணிப்பு
/
ரயில் முன்பதிவு பெட்டியில் கூடுதல் கண்காணிப்பு
ADDED : அக் 15, 2025 12:03 AM
திருப்பூர்; திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயிலின் முன்பதிவு பெட்டிகளில் கூடுதல் கண்காணிப்புடன் முன்பதிவு செய்யாமல் ஏறி ஏமாற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் ரயில்வே அறிவித்துள்ளது.
திருப்பூரில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள், தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல குடும்பம், குடும்பமாக குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் செல்வதால், திருப்பூர் ரயில் நிலையத்தில் அளவுகடந்த கூட்டம் சில நாட்களாக காணப்படுகிறது.
திருப்பூர், ஈரோடு, கரூர், கோவை போன்ற தொழில் நகரங்களுக்கு தீபாவளியில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என ஆண்டுதோறும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.
இருப்பினும், ஒவ்வொருமுறையும் ரயில்வே நிர்வாகம் கூடுதல் ரயில்களை இயக்காமல் ஏமாற்றி வருவதாகவும் பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா செல்லும் விரைவு ரயில் திருப்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தபோது முன்பதிவு செய்யாத பயணிகள் பலர், முன்பதிவு ரயில் பெட்டிகளில் ஏறியதால் முன்பதிவு செய்து பயணித்து வந்த பயணிகள் பலரும் அவதி அடைந்ததுடன் ரயில்வே துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை.
இதுகுறித்து திருப்பூர் ரயில்நிலைய மேலாளர் கிருஷ்ணாநந்தன் கூறுகையில், ''தீபாவளி பண்டிகைக்கு பலரும் வடமாநிலங்களுக்கு செல்வதால், வழக்கமான கூட்டத்தை விட பல மடங்கு கூட்டம் ரயில் நிலையத்தில் உள்ளது.
முன்பதிவு பெட்டியில் உரிய நபர்கள் மட்டும் ஏறுவதற்கு வசதியாக, கூடுதலாக ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர். விரைவில், கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

