/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எரியாத விளக்குகளை மாற்றுங்க! இருளில் நெடுஞ்சாலை
/
எரியாத விளக்குகளை மாற்றுங்க! இருளில் நெடுஞ்சாலை
ADDED : ஜூன் 04, 2025 12:24 AM
உடுமலை,; உடுமலை -- பழநி ரோட்டில் எரியாத மின் விளக்குகளால், வாகன ஓட்டுநர்கள் இருளில் பயணிக்கும் அவலம் ஏற்படுகிறது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில், உடுமலை கொல்லம்பட்டறை முதல் கொழுமம் ரோடு பிரிவு வரை நகராட்சி எல்லையாக உள்ளது.
இப்பகுதி முழுவதும், உடுமலை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு, அதில் உயர் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் பெரும்பான்மையான விளக்குகள் எரியாமல், வெளிச்சம் இல்லாமல் பழுதடைந்த நிலையில் உள்ளது.இதனால் இரவு நேரங்களில், தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை நகரப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலைதான் உள்ளது.
முதலில் ஓரிரு விளக்குகள் பழுதடைந்தன. தற்போது பெரும்பான்மையான விளக்குகளும் பழுதடைந்து இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.பொதுமக்களும் இருட்டில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
தற்போது ரோட்டின் இருபுறமும் இருக்கும் கடைகளில் உள்ள, விளக்குகளின் வெளிச்சம் தான் ரோட்டில் பிரதிபலிக்கிறது.
விடுமுறை நாட்களில் கடைகள் இல்லாத நேரங்களில், இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல் விபத்து ஏற்படும் அபாயமாக, உடுமலை நகரப்பகுதி உள்ளது.
நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில், வாகனங்கள் அதிவேகத்துடன் கடந்து செல்கின்றன. போதிய வெளிச்சம் இல்லாததால், உள்ளூர் வாசிகள் ரோட்டை கடப்பதற்கும் பாதுகாப்பில்லாமல் உள்ளது.
சில நேரங்களில், இரண்டு சக்கர வாகனங்களை இருளில் கவனிக்காமல், சரக்கு வாகனங்கள் விபத்து ஏற்படுத்தும் வகையில் கடந்து செல்கின்றன.
சென்டர் மீடியன்களில் உள்ள உயர்மின் விளக்குகளை, உடனடியாக சரிசெய்வதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.