/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை துறையில் இன்னும் புதுமைகள் தேவை!
/
பின்னலாடை துறையில் இன்னும் புதுமைகள் தேவை!
UPDATED : பிப் 25, 2024 10:32 AM
ADDED : பிப் 25, 2024 12:31 AM

''திருப்பூர் பின்ன லாடைத் துறையில் இன்னும் பல புதுமைகள் தேவை'' என்று கூறுகிறார், 'நிட்-டெக்' கண்காட்சி தலைவர் ராயப்பன்.
திருமுருகன்பூண்டி ைஹடெக் இன்டர்நேஷனல் வளாகத்தில் வரும் மார்ச் 1 முதல் 4ம் தேதி வரை, 17வது 'நிட்-டெக்' கண்காட்சி நடைபெற உள்ளது. இரண்டு லட்சம் சதுர அடியில் நடைபெற உள்ள கண்காட்சியில், உள்நாடு மற்றும் அமெரிக்கா, ஐரோப்பா, தைவான், சீனா, ஜப்பான், கொரியா உட்பட உலகளாவிய நாட்டு நவீன தொழில் நுட்பங்கள் அனைத்தும், ஓரிடத்தில் அணிவகுக்கின்றன.
திருப்பூர் பின்னலாடைத்துறையில் அதிகரித்து வரும் தொழில்நுட்பத் தேவை;'நிட்-டெக்' கண்காட்சி தொடர்பாக 'நிட்டெக்' கண்காட்சி தலைவர் ராயப்பன், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:
திருப்பூரில் இயந்திர கண்காட்சி நடத்த வேண்டும் என்ற ஆர்வம் எப்படி பிறந்தது?
கடந்த 1981ல், 'ஹைடெக் இன்ஜினியரிங்' என்ற பெயரில், பின்னலாடை இயந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலையை துவக்கி நடத்திவந்தோம். திருப்பூரின் பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மட்டும் போதாது; உலகளாவிய தொழில்நுட்பங்கள் அவசியம் என்பதை உணர்ந்தோம். தொழில்முனைவோர் அனைவராலும், வெளிநாடுகளுக்குச் சென்று கண்காட்சியை பார்வையிடமுடியாது. அதனால், வெளிநாட்டு தொழில்நுட்பங்கள் அனைத்தையும் உள்நாட்டில் சங்கமிக்க முடிவு செய்தோம்.
முதல் கண்காட்சி
முதல் 'நிட்-டெக்' கண்காட்சி பற்றி...
நண்பர்கள் குழுவாக இணைந்து, கடந்த 1993ல், திருப்பூர் - பல்லடம் ரோட்டிலுள்ள திருமண மண்டபத்தில்தான் முதல் 'நிட்டெக்' கண்காட்சியை நடத்தினோம். வெறும் 20 ஆயிரம் சதுர அடியிலேயே கண்காட்சி நடத்த முடிந்தது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச்சேர்ந்த 65 பின்னலாடை உற்பத்தி இயந்திரங்களை காட்சிப்படுத்தின; தொடர்ந்து 11 நாட்கள் கண்காட்சி நடைபெற்றது. திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் பலரும், அந்த கண்காட்சி வாயிலாகதான், மிகப்பெரிய நிட்டிங் இயந்திரங்களை பார்த்து வியந்தனர்.
துவக்க காலத்தில் ஆண்டுதோறும் கண்காட்சி நடத்திவந்தோம். ஓராண்டு இடைவெளியில் பெரிய தொழில்நுட்ப மாறுதல்கள் இல்லாததால், கடந்த 1995ம் ஆண்டுக்குப்பின், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கண்காட்சி நடத்தி வருகிறோம்.
இந்திய இயந்திரங்கள்
'நிட்-டெக்' கண்காட்சியில் 'மேக் இன் இந்தியா' தொழில்நுட்பங்கள் எந்தளவு இடம்பெறுகின்றன?
சர்வதேச தரத்திலான பின்னலாடை உற்பத்தி இயந்திரங்கள், உள்நாட்டிலும் அதிகளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 'நிட்-டெக்'கில், 40 சதவீதம் 'மேக் இன் இந்தியா' மெஷின்கள் இடம்பெறுகின்றன. திருப்பூர், கோவை, அகமதாபாத், சூரத் நிறுவனங்கள் தயாரிப்பில், 20 சதவீதம் டையிங் இயந்திரங்கள்; 20 சதவீதம் துணி ஆய்வு, ஸ்டென்டர் உள்ளிட்ட இதர இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
சோலார் இயந்திரங்கள்
'லீன்' தொழில்நுட்பத்தை திறம்பட செயல்படுத்த கைகொடுக்கும் இயந்திரங்கள் ஏதும் இடம்பெறுகின்றனவா?
உள்நாட்டு நிறுவனத்தின் விசாலமான அரங்கில், சிக்கனமாகவும், சுகாதாரமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலான தொழிற்கூடங்கள் அமைக்கும் கட்டமைப்புகளை பார்க்கலாம். குறிப்பாக, சூரிய ஒளியை நிறுவனத்துக்குள் தருவித்து மின் பயன்பாட்டை குறைக்கும் மேற்கூரை உட்பட, செலவை குறைத்து, உற்பத்தி பெருக்குவதற்கு கைகொடுக்கும் பலவிதமான இயந்திரங்கள் வருகின்றன.
தவறவிடாதீர்கள்
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையின் எந்த பிரிவில் அதிக தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன?
திருப்பூரில், நிட்டிங், டையிங், காம்பாக்டிங், பிரின்டிங் பிரிவுகள் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் மிகவும் சக்திவாய்ந்ததாக உள்ளன. செயற்கை இழை ஆடை தயாரிப்பில் பலம்பெறுவதற்கு, மேலும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் அதிகம் தேவைப் படுகின்றன. கட்டிங் முதல் பேக்கிங் வரையிலான உற்பத்தி பிரிவில் இன்னும் புதுமைகள் புகுத்தப்பட வேண்டும்.
இத்தாலி, ஜப்பான் நாட்டு கட்டிங் இயந்திரங்கள், துணி வெட்டும் போது ஏற்படும் துணி இழப்பை, 7 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கின்றன. கண்காட்சியில் இடம்பெற உள்ள இந்த இயந்திரங்களை அனைவரும் தவறாமல் பார்வையிடவேண்டும்.
உற்பத்தி வேகம்
தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வாகும் தொழில்நுட்பங்கள் என்னென்ன வந்துள்ளன?
ஆடை தயாரிப்பில், பிசிறு வெட்டுவது, தயாரித்த ஆடையை மடிப்பது, மடித்த ஆடையை கவரில் வைத்து ஒட்டுவதற்கு என தனித்தனி தொழிலாளர் தேவைப்படுகின்றன. புதிய தொழில் நுட்பங்களால், ஆடை தைக்கும்போதே மீதமாகும் நுால், துணி வெட்டப்பட்டு விடுகிறது. இந்த நுால், துணி கழிவுகள் உறிஞ்சப்பட்டு, ஒரு பைக்குள் சேகரமாகி தொழிற்சாலையின் துாய்மை பரா மரிக்கப்படுகிறது.
'டிராக்கில்' ஆடையை வைத்தால், நகர்த்திச் சென்று, பக்கவாட்டுப் பகுதி, கழுத்துப்பகுதிகளை நேர்த்தியாக மடித்துக் கொடுப்பது; ஆடையை கவரினுள் போட்டு, 'சீல்' வைக்கும் ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பங்களெல்லாம் பரவலாகி வருகின்றன.
புதிய தொழில்நுட்பங்களின் வருகையால், எதிர்காலத்தில் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னைகள் குறைவதோடு, உற்பத்தியும் வேகம்பெறும்.
தொழில்துறையினருக்குதேவாமிர்தம்
கண்காட்சியில் இடம்பெறப்போகும் மிகவும் புதுமையான தொழில்நுட்பம் என்று எதைச் சொல்வீர்கள்?
ஜீரோ டிஸ்சார்ஜ் மற்றும் உப்பு இல்லாத சாயமேற்றுதல் தொழில்நுட்பம் கொண்ட ஜெர்மனி நாட்டு டையிங் இயந்திரம் ஒன்று, கண்காட்சியில் இடம்பெற உள்ளது; இதை, தொழில்துறையினருக்கு கிடைத்த தேவாமிர்தம் என்பேன். அதிக விலையுள்ளபோதும்கூட, திருப்பூரில் ஏற்கனவே இரண்டு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. கண்காட்சியில் முழு இயக்க நிலையில் வைக்கப்பட்டு, செயல் விளக்கம் அளிக்கும்போதுதான், இம் மெஷினின் தனித்திறன் தெரியவரும்.
சாயக் கலவை தயாரிக்கும் ரோபோ
பின்னலாடை உற்பத்தி துறையில் ரோபோடிக் பயன்பாடு எப்படி உள்ளது?
மற்ற துறைகள் போன்று ஜவுளித்துறையிலும் ரோபோட்டிக் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கோவை நிறுவனம், சாய கலவை தயாரிக்கும் ரோபோவை உருவாக்கியுள்ளது. துணியில் சாயமேற்றவேண்டிய நிறம் குறித்த விவரங்களை அளித்தால்போதும், ரோபோ ஆய்வகம் தானாக இயங்கி, வெவ்வேறு நிறங்களை சரியான அளவில் கலந்து, தேவையான நிறத்தை தயாரித்துவிடுகிறது. ஆடை தயாரிப்பு பிரிவில், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஆடைகளை சுமந்துசென்று சேர்க்கும் ஹெல்பர் ரோபோக்களும் வந்து விட்டன.