/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.86 கோடியில் கட்டப்பட்ட எல்லீஸ் அணைக்கட்டு தயார்: ஒரு கி.மீ., துாரத்திற்கு கான்கிரீட் கரை அமைக்க கோரிக்கை
/
ரூ.86 கோடியில் கட்டப்பட்ட எல்லீஸ் அணைக்கட்டு தயார்: ஒரு கி.மீ., துாரத்திற்கு கான்கிரீட் கரை அமைக்க கோரிக்கை
ரூ.86 கோடியில் கட்டப்பட்ட எல்லீஸ் அணைக்கட்டு தயார்: ஒரு கி.மீ., துாரத்திற்கு கான்கிரீட் கரை அமைக்க கோரிக்கை
ரூ.86 கோடியில் கட்டப்பட்ட எல்லீஸ் அணைக்கட்டு தயார்: ஒரு கி.மீ., துாரத்திற்கு கான்கிரீட் கரை அமைக்க கோரிக்கை
UPDATED : ஜூலை 25, 2024 01:04 PM
ADDED : ஜூலை 25, 2024 06:33 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ரூ.86 கோடியில் கட்டிவரும் எல்லீஸ் அணைக்கட்டு தயாராகியுள்ளது. அதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில், கப்பூர்-ஏனாதிமங்கலம் இடையே, எல்லீஸ் அணைக்கட்டு இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டிய இந்த அணையின், இடதுபுறத்தில் பிரிந்து செல்லும் ஆழங்கால், மரகதபுரம், கண்டம்பாக்கம் கால்வாய்கள் மூலம் விழுப்புரம் சுற்றுப்புரத்தில் 14 ஏரிகளும், இடதுபுறத்தில் எரளூர், ரெட்டி கால்வாய்கள் மூலம் தி.வி.நல்லூர் பகுதி 12 ஏரிகளும் பாசன வசதி பெற்று வந்தது.
இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக கடந்த 2021ம் ஆண்டு, தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால், மிக பழைமையான எல்லீஸ் அணைக்கட்டு முற்றிலும் உடைந்து சேதமடைந்தது. அணையை புதுப்பிக்க வேண்டுமென விவசாயிகள், பொது மக்கள் தொடர் கோரிக்கை வைத்தனர். அமைச்சர் பொன்முடியும், முதல்வரிடம் கோரிக்கை வைத்ததையடுத்து, எல்லீஸ் அணைக்கட்டு ரூ.86.25 கோடியில் புதிதாக கட்டப்படும் என்று, கடந்த 2023ம் ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. நபார்டு வங்கி நிதி உதவியுடன், புதிய அணைக்கட்டு கட்டும்பணி கடந்தாண்டு நவ.11ம் தேதி தொடங்கியது.
கப்பூர்-ஏனாதிமங்கலம் இடையே, பழைய எல்லீஸ் அணைக்கட்டின் அருகே 650 மீட்டர் அகலம், 1.5 மீட்டர் உயரத்தில், 10 மணல் போக்கிகளுடன், புதிய அணைக்கட்டின், இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், நேற்று நேரில் அழைத்துச்செல்லப்பட்டு, அணை கட்டுமான பணிகளை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா, உதவி செயற்பொறியாளர் ஐயப்பன், உதவி பொறியாளர்கள் மனோஜ்குமார், விக்னேஷ்குமார் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது விவசாயிகள் கூறியதாவது: புதிய அணைக்கட்டில் ஏனாதிமங்கலம் பகுதி கரை பகுதியில் 50 மீட்டர் தொலைவிற்கு மட்டுமே கான்கிரீட் சுவர் அமைத்துள்ளனர். அந்த பகுதி தாழ்வானது, எப்போதும் மழை வெள்ள காலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, ஏனாதிமங்கலம், செம்மார், எரளூர் கிராமங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால், இரு புறமும் 1 கி.மீ. தொலைவுக்கு கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஷோபனா கூறியதாவது: எல்லீஸ் அணைக்கட்டில் வரும் பருவமழை காலத்தில், தென்பெண்ணை ஆற்றில் பெறப்படும் நீர், வலதுபுறம் எரளூர், ரெட்டி கால்வாய்கள், இடதுபுறம் மரகதபுரம், கண்டம்பாக்கம், ஆழங்கால் கால்வாய் மூலம் சென்று சுற்றுப்பகுதி 36 கிராமங்களும் நிலத்தடி நீர் மூலம் பயன்பெறலாம். தற்போது, புதிய அணைக்கட்டின் ஒருபுரம் 100 மீட்டர் தொலைவிலும், மறுபுரம் 70 மீட்டர் தொலைவிலும், பாதுகாப்பாக கான்கிரீட் கரை அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விவசாயிகள், 1 கி.மீ., தொலைவுக்கு, தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து, அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றார்.