/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முத்திரைத்தாள் தட்டுப்பாடு : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
/
முத்திரைத்தாள் தட்டுப்பாடு : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
முத்திரைத்தாள் தட்டுப்பாடு : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
முத்திரைத்தாள் தட்டுப்பாடு : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
ADDED : அக் 20, 2025 09:33 PM
விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டத்தில் ஆவண பதிவிற்கு முத்திரைத்தாள் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசுக்கு ,விழுப்புரம் மாவட்ட பத்திர பதிவு துறையின் மூலம் கணிசமான அளவில் வருவாய் கிடைக்கிறது. விழுப்புரம் மாவட்ட கருவூலகத்திலிருந்து விழுப்புரம், திண்டிவனம், வானுார், செஞ்சி ஆகிய 4 துணை கருவூலங்களுக்கு தேவையான அளவிற்கு முத்திரை தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டு முத்திரைத்தாள் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
விழுப்புரம் துணை கருவூலத்திலிருந்து முத்திரை தாள்கள் விழுப்புரம், அனந்தபுரம், வளவனுார், விக்கிரவாண்டி, வழுதாவூர் பகுதியில் உள்ள முகவர்களுக்கு முத்திரைத்தாள்கள் விநியோகிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் தமிழக அரசு குறைந்த மதிப்பிலான 10 ரூபாய் முதல் 50 ரூபாய் முக மதிப்புடைய முத்திரை தாள்களையும், பின்னர் அதிக முக மதிப்புடைய 25 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் முக மதிப்புடைய முத்திரை தாள்களையும் அச்சடிப்பு செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக வினியோகத்திலிருந்து அரசு நிறுத்தியது.
தற்பொழுது 100, 500, 1000 ரூபாய் மற்றும் 5,000 ஆயிரம் ரூபாய் முக மதிப்பில் உள்ள முத்திரை தாள்கள் மட்டும் மக்கள் பயன்பாட்டிற்கு புழக்கத்திலிருந்த நிலையில் கடந்த 15 நாட்களாக 100, 1000, 5000 ஆயிரம் ரூபாய் முக மதிப்பிலான முத்திரை தாள்கள் கருவூலத்தில் இருப்பு இல்லாததால் முத்திரை தாள் விற்பனையாளர்களுக்கு வினியோகம் செய்யாமல் நிறுத்தியதால் விழுப்புரம் மாவட்டத்தில் பத்திர பதிவிற்கு முத்திரை தாள்கள் கிடைக்காமல் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் தங்களது சொத்து ஆவணப்பதிவு செய்வதில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆன்லைனில் பணம் செலுத்தி பத்திர பதிவு செய்தாலும், முத்திரை தாள்கள் வைத்து பதிவு செய்து அந்த பத்திரத்தை வீட்டிற்கு எடுத்து செல்வதில் தான் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும்.
கலெக்டர் மற்றும் கருவூல அலுவலர் இது குறித்து துரித நடவடிக்கை எடுத்து மற்ற மாவட்ட கருவூலங்களிலிருந்தோ அல்லது துறையின் முதன்மைச் செயலருக்கு எடுத்துக் கூறி புதிய முத்திரை தாள்களை மாவட்ட கருவூலங்களுக்கு வரவழைத்து தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

