/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் எம்.ஜி., ரோடு ஆக்கிரமிப்பால் வியாபாரிகள்... பாதிப்பு; கோர்ட் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லையென அதிருப்தி
/
விழுப்புரம் எம்.ஜி., ரோடு ஆக்கிரமிப்பால் வியாபாரிகள்... பாதிப்பு; கோர்ட் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லையென அதிருப்தி
விழுப்புரம் எம்.ஜி., ரோடு ஆக்கிரமிப்பால் வியாபாரிகள்... பாதிப்பு; கோர்ட் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லையென அதிருப்தி
விழுப்புரம் எம்.ஜி., ரோடு ஆக்கிரமிப்பால் வியாபாரிகள்... பாதிப்பு; கோர்ட் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லையென அதிருப்தி
ADDED : ஜூலை 29, 2024 05:33 AM

விழுப்புரம் : விழுப்புரத்தின் முக்கிய வணிக வீதிகளில், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளதால், வியாபாரம் பாதித்து வருவதாக வணிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விழுப்புரத்தில் நேருஜி ரோடு, எம்.ஜி., ரோடு, காமராஜர் வீதி, திரு.வி.க. வீதி, பகர்ஷா வீதி ஆகியவை முக்கிய வணிக வீதிகளாகும். இதில் எம்.ஜி., ரோடு, பகர்ஷா வீதி ஆகியவை முழுவதும் மளிகை முதல் காய்கறிகள் கடைகள் வரை உள்ள சந்தை பகுதியாகும்.
இந்த இரு சாலைகளிலும், நீண்ட காலமாக தொடரும் ஆக்கிரமிப்புகளால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக எம்.ஜி., ரோட்டில், 700க்கும் மேற்பட்ட கடைகளும், இந்த கடைகளுக்கு முன்பு சுமார் 500 பிளாட்பார கடைகள் ஆக்கிரமிப்புகளாக உள்ளதாக வியாபாரிகள் புலம்புகின்றனர்.
வீரவாழியம்மன் கோவில் தொடக்கத்திலேயே சாலை முகப்பை ஆக்கிரமித்துள்ள கடைகள், தொடர்ந்து, பழக்கடைகள், காய்கறி கடைகள், பூக்கடைகள், பொரி கடலை, தேங்காய் கடைகள், பூட்டு சாவி கடைகள், பூண்டு கடைகள் என எம்.ஜி. ரோடில், கடைகளுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
முகூர்த்த தினங்கள், விழா காலங்களில் உள்ளே செல்ல முடியாமல் வாகனங்கள் சிக்கித் தவிக்க வேண்டியுள்ளது. ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பால், வியாபாரிகள், பொதுமக்கள் வர வழியின்றி வியாபாரம் பாதித்துள்ளதாக வியாபாரிகள் புலம்புகின்றனர்.
இது குறித்து வணிகர் சங்கத்தினர் கூறுகையில், விழுப்புரம் எம்.ஜி. ரோட்டில் தொடக்கம் முதல் கடைசி வரை ஏராளமான தள்ளுவண்டி கடைகள், பழக்கடைகள், பெட்டிக்கடைகள் வைத்து விட்டனர். ஆரம்பகாலங்களில் தரையில் கொட்டி வியாபாரம் செய்தனர். தற்போது நிரந்தரமாக தள்ளுவண்டி கடைகளை, கடைக்கு முன்பு வைத்துள்ளனர். இதனால் வாகனங்கள், ஆட்டோவில் வருவர்கள் மொத்தமாக மளிகை பொருட்கள் வாங்க வருவோர் உள்ளே வருவதில்லை.
இது தொடர்பாக, வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில், கடந்த 2014ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரித்த நீதிமன்றம் எம்.ஜி., ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை ஒழுங்குபடுத்தி அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர், எஸ்.பி., ஆகியோருக்கு நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது. அந்த வழக்கின் தீர்ப்புள்ள நிலையில், ஆக்கிரமிப்பு குறைந்தபாடில்லை.
இது தொடர்பாக, தொடர்ச்சியாக வந்த 3 கலெக்டர்கள், எஸ்.பி.,க்களிடம், தொடர்ந்து வணிகர் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நடை பாதை கடையினருக்கு மாற்று இடத்தை ஒதுக்கி நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களும் வந்து செல்வதற்கு வழியின்றி உள்ளது என்றனர்.