/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மூன்று குடிநீர் திட்டம் இருந்தும் உப்பு தண்ணீர் தான் வருகிறது
/
மூன்று குடிநீர் திட்டம் இருந்தும் உப்பு தண்ணீர் தான் வருகிறது
மூன்று குடிநீர் திட்டம் இருந்தும் உப்பு தண்ணீர் தான் வருகிறது
மூன்று குடிநீர் திட்டம் இருந்தும் உப்பு தண்ணீர் தான் வருகிறது
ADDED : ஜூன் 30, 2024 05:30 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சியில் மூன்று குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது ஆனால் நகரில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. அதுவும் உப்பு தன்மையாக உள்ளது என, நகராட்சி கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடந்தது. கமிஷனர் ராஜமாணிக்கம், இன்ஜினியர் அபூபக்கர் சித்தீக் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் : பாலசுப்பிரமணியம், (மார்க்சிஸ்ட்): கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு சம்பளம் பாக்கி ஏன் வைத்துள்ளீர்கள். உழைப்பவர்களுக்கு பாக்கி வைக்காதீர்கள். நகரில் பாதாள சாக்கடை திட்டம் வரப்போகிறது பின் எதற்காக தேவையில்லாமல் ரோடு போடுகிறீர்கள்.
ராமதிலகவதி, (அ.தி.மு.க.,): பட்டாபிராமர் கோவில் தெருவில் குப்பை, முட்புதர்கள் அதிக அளவில் உள்ளது அகற்ற நடவடிக்கை எடுங்கள். நகரில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. தடுக்க நடவடிக்கை எடுங்கள்.
ஜெயகவிதா,தி.மு.க.,): மீனாட்சி சுந்தரம் தெருவில் 15 ஏக்கர் அளவில் நகராட்சி இடம் உள்ளது. அதை கையகப்படுத்த முறையான நடவடிக்கை எடுங்கள். அதில் மக்களுக்கு பயனுள்ள வகையில் ஏதாவது கட்டடம் கட்டுங்கள்.
மீனாட்சி, (தி.மு.க.): குப்பை, குடிநீர், வாறுகால் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். கூடுதலாக துாய்மை பணியாளர்களை பணியில் அமர்த்துங்கள். நகராட்சி மூலம் மூன்று குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது ஆனால் நகரில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. அதுவும் உப்பு தன்மையாக உள்ளது. அனைத்து வார்டுகளிலும் ஒரே மாதிரியான குடிநீரை வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.
இளங்கோ, (தி.மு.க.): வைகை, தாமிரபரணி குடிநீரை கலந்து தருவதால் தான் இந்த பிரச்சனை வருகிறது. தண்ணீரின் சுவை மாறி விடுகிறது. ஏதாவது ஒரு குடிநீரை வழங்குங்கள். மக்களிடத்தில் பதில் சொல்ல முடியவில்லை.
அப்துல் ரகுமான், (தி.மு.க.,): பத்தாவது வார்டில் தாமிரபரணி குடிநீர் வருவதே இல்லை. குறிப்பிட்ட வார்டுகளுக்கு மட்டும் தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. வார்டில் அவசரப் பணிகளுக்காக நகராட்சி அலுவலர்களை தொடர்பு கொண்டால் அலைபேசியை எடுப்பதே இல்லை. நகராட்சியில் கவுன்சிலர்களுக்கு மரியாதை இல்லை. பின் எதற்கு நாங்கள் கவுன்சிலராக இருக்க வேண்டும். எனது வார்டில் இரண்டரை ஆண்டுகளாக எந்தவித வளர்ச்சிப் பணிகளும் செய்யவில்லை. எங்கள் வார்டை புறக்கணிப்பு செய்கிறீர்களா?
சிவபிரகாசம், (தி.மு.க.,): அருப்புக்கோட்டைக்கு பல ஆண்டுகளாக கை கொடுத்தது வைகை குடிநீர். அவசர காலத்தில் கை கொடுத்த வைகையை கைவிட்டு விட வேண்டாம்.
முருகானந்தம், (பா.ஜ.,): நகரில் மாடுகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன இவற்றால் விபத்தும் ஏற்படுகிறது. ஏதாவது நடவடிக்கை எடுங்கள்.
அப்துல்ரகுமான், (தி.மு.க.,): நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள். ஓட்டுக்காக கவுன்சிலர்கள் தான் தயவு தாட்சண்யம் பார்க்க வேண்டும். அதிகாரிகள் பார்க்கத் தேவையில்லை. உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்.
அகமதுயாசீர்,(தி.மு.க.,): அஜீஸ் நகர் பூங்காவில் பாம்புகள், விஷ பூச்சிகள் அதிக அளவில் உள்ளது. மக்கள் பூங்காவிற்குள் வர பயப்படுகின்றனர்.
இவ்வாறு விவாதங்கள் நடந்து.