/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தார் ரோடு போடாததால் வாகன ஓட்டிகள் அவதி
/
தார் ரோடு போடாததால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூன் 30, 2024 06:05 AM

காரியாபட்டி : முடுக்கன்குளம், அல்லாளப்பேரி கண்மாய் பாலம் அருகே தார் ரோடு போடாமல் ஜல்லிக்கற்களாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காரியாபட்டியில் இருந்து நரிக்குடிக்கு செல்லும் ரோட்டில் ஸ்ரீராம்பூர் அருகே முடுக்கன்குளம், அல்லாளப்பேரி கண்மாய்க்கு செல்லும் வரத்துக்கால்வாயில் தரைப்பாலம் இருந்தது. அடிக்கடி தரைப்பாலம் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக இருந்ததால் வாகனங்கள் சென்றுவர பெரிதும் சிரமம் ஏற்பட்டது.
இதில் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். மழைக்காலங்களில் அதிக அளவில் தண்ணீர் வந்ததால் தரைப்பாலம் மூழ்கி வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்ததால் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். சென்ற ஆண்டு உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி துவக்கப்பட்டது.
பல மாதங்களாக ஆமை வேகத்தில் பாலம் பணி நடந்து வந்தது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட ரோடும் சேதம் அடைந்து வாகனங்கள் சென்று வருவதில் பெரிதும் சிரமம் ஏற்பட்டது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதற்குப்பின் பாலம் வேலை வேகம் எடுத்தது. தற்போது பாலம் பணி முடிவுற்று அதன் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. பாலத்திற்கு முன்னும் பின்னும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு ரோடு போடப்பட்டது.
ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளதால் வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கிறது. டூவீலரில் செல்பவர்கள் நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படுகிறது.
பல நாட்களாக தார் ரோடு போடாமல் கிடப்பில் போட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விபத்து ஏற்படுவதற்கு முன் பாலத்தின் இரு பகுதிகளிலும் தார் ரோடு போட நடவடிக்கை எடுத்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர்.