/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெம்பக்கோட்டையில் இல்லை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
/
வெம்பக்கோட்டையில் இல்லை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
வெம்பக்கோட்டையில் இல்லை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
வெம்பக்கோட்டையில் இல்லை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
ADDED : ஜூலை 29, 2024 12:16 AM
சிவகாசி : வெம்பக்கோட்டையில் அரசு மருத்துவமனை இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சைக்கு கூட வழியில்லாமல் சிரமப்படுகின்றனர். இங்கு ஆரம்ப சுகாதார நிலையமாவது அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
வெம்பக்கோட்டையில் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். விஜய கரிசல்குளம், வனமூர்த்தி லிங்கபுரம், கோமாளிப்பட்டி, இந்திரா நகர், கண்டியாபுரம், எழுவன் பச்சேரி, இனாம் மீனாட்சிபுரம், விளாமரத்துப்பட்டி, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக வெம்பக்கோட்டை உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் தொகையை பொறுத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெம்பக்கோட்டை தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.
பெரிய ஊராக, தாலுகாவாக இருந்தும் வெம்பக்கோட்டையில் அரசு மருத்துவமனை அமைக்கக்கூடிய தகுதி இருந்தும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கூட இல்லை. இங்கு ஒரே ஒரு செவிலியருடன் துணை சுகாதார நிலையம் மட்டுமே இயங்கி வருகின்றது. இப்பகுதி மக்கள் சிறிய தலைவலி, காய்ச்சல் என்றால் கூட கல்லமநாயக்கன்பட்டி, ஆலங்குளம், தாயில்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 8 கி.மீ., துாரம் செல்ல வேண்டியுள்ளது.
வெம்பக்கோட்டை சுற்றியுள்ள பட்டாசு ஆலைகளில் திடீரென எப்போதாவது ஏற்படும் விபத்துகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வழி இல்லை. இதனால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வெம்பக்கோட்டை பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க வெம்பக்கோட்டையில் மருத்துவமனை இல்லாததால் தாயில்பட்டி, சிவகாசி, சாத்துாருக்கு செல்ல வேண்டி இருந்தது.
வெம்பகோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ஊராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முதல்வருக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இங்கு குறைந்தபட்சம் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாவது அமைக்க வேண்டும் என 20 கிராம மக்கள், பட்டாசு தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.