/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடுகளுக்கான எண் பெறும் தீர்மானம் ஒத்திவைப்பு
/
ரோடுகளுக்கான எண் பெறும் தீர்மானம் ஒத்திவைப்பு
ADDED : மே 23, 2025 11:21 PM
விருதுநகர்: விருதுநகர் நகராட்சியில் விடுபட்ட ரோடுகளுக்கு 'யுனிகோடு' எண் பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.
விருதுநகர் நகராட்சியின் அவசரக் கூட்டம் நகராட்சி தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. கமிஷனர் சுகந்தி, பொறியாளர் எட்வின் பிரைட் ஜோஸ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
வீடு வீடாக குப்பை பெறும் ஒப்பந்தம் மே மாதத்துடன் நிறைவு பெறுவதால், அதை நீட்டிப்பு செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்போது பேசிய கவுன்சிலர்கள் ஜெயக்குமார் (மார்க்சிஸ்ட்), மதியழகன் (தி.மு.க.,) ஆகியோர் வார்டுகளில் சரிவர குப்பைகள் வாங்கும் பணி நடக்கவில்லை. அனைத்து ரோட்டோரங்களிலும் குப்பை தேங்கி கிடக்கின்றன. கவுசிகா ஆற்றில் வியாபாரிகள் குப்பை கொட்டுகின்றனர்.
எனவே, ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு நல்ல முறையில் பணி செய்பவருக்கு ஒப்பந்தம் விட வேண்டும் என்றனர்.
விடுபட்ட 69 ரோடுகளுக்கான 'யுனிகோடு' எண் பெறுவதற்கான தீர்மானம் வந்தது.
அப்போது பேசிய கவுன்சிலர்கள் உமாராணி (தி.மு.க.,), முத்துலட்சுமி (சுயேச்சை), சரவணன் (அ.தி.மு.க.,), வெங்கடேஷ் (அ.தி.மு.க.,), மைக்கேல்ராஜ் (அ.தி.மு.க.,) ஆகியோர், ஏற்கனவே உள்ள ரோடுகளுக்கு எண்கள் உள்ளதா. இருந்தால் அந்த பட்டியலை கவுன்சிலர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சுகந்தி, கமிஷனர்: அக்கோப்புகளை எனது அறையில் வந்து பார்வையிடலாம்.
நகராட்சியில் ஒப்படைக்கப்படாத ரோடுகள், வரைமுறைப்படுத்தப்படாத பகுதியில் ரோடுகள்அமைக்க முடியுமா என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
நகரமைப்பு அலுவலர்: வரைமுறைப்படுத்தப்படாத பகுதிகளில் சாலை அமைக்க முடியாது. அதற்குத் தனியாக குடியிருப்போர் பணம் செலுத்த வேண்டும்.
கவுன்சிலர்கள்: திட்ட வரைபட ஒப்புதல் பெறாமல் ரோடுகள் கட்டடங்கள் கட்டி முடிக்கப்படுகிறது. அக்கட்டடங்களுக்கு சொத்து வரி வழங்கப்படுகிறது ஏன்.
இதையடுத்து, அத்தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.