ADDED : ஜூலை 11, 2024 11:26 PM
சென்னை:அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத, அண்ணா பல்கலை பதிவாளருக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றம், 'பிடிவாரன்ட்' பிறப்பித்துள்ளது.
சென்னையை சேர்ந்த தேவதாஸ் மனோகரன், அண்ணா பல்கலையில் பேராசிரியராக பணியாற்றினார். பல்கலையில் துணை வேந்தர் பதவி காலியான போது, அதற்கு விண்ணப்பித்தார்.
திருச்சியில் அண்ணா பல்கலை டெக்னாலஜியின் துணை வேந்தராக பணியாற்றிய போது, உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகள் நியமனத்தில் முறைகேடு செய்ததாக, 2018ல் 'மெமோ' வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மெமோவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலை தரப்பு மேல்முறையீடு செய்தது. மனுவை, இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.
தேவதாஸ் மனோகரனுக்கான ஓய்வூதிய பலன்களை, எட்டு வாரங்களில் வழங்கவும், அண்ணா பல்கலை பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உத்தரவை அமல்படுத்தாததால், பதிவாளர் டாக்டர் பிரகாஷுக்கு எதிராக, அவமதிப்பு வழக்கை தேவதாஸ் மனோகரன் தாக்கல் செய்தார்.
இம்மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஒரு வாரத்தில் உத்தரவை அமல்படுத்துவதாக, பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.
இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பதிவாளருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த 8ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பதிவாளர் ஆஜராகவில்லை.
நோட்டீஸ் பெற்றும் ஆஜராகாததால், பதிவாளரான டாக்டர் பிரகாஷ்க்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, வரும் 15க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.