நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக வருவாய் துறை செயலருக்கு உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக வருவாய் துறை செயலருக்கு உத்தரவு
ADDED : ஜூலை 11, 2024 11:25 PM
சென்னை:அவமதிப்பு வழக்கில், வருவாய்த்துறை செயலர், ஆணையர் மற்றும் மூன்று மாவட்ட கலெக்டர்கள், வரும், 27ம் தேதி ஆஜராக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் உள்ளிட்ட 11 பேர் தாக்கல் செய்த, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கூறியிருப்பதாவது:
வருவாய் உதவியாளர்களாக நாங்கள் பணியாற்றி வந்தோம். 2018ல், துணை தாசில்தார் பதவிக்கான தற்காலிக பட்டியல் தயாரானது. இதில், இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நேரடியாக தேர்வான உதவியாளர்கள் தான், தேர்வு பட்டியலில் முதலாவதாக இடம் பெற வேண்டும்.
எனவே, மெரிட் அடிப்படையில், துணை தாசில்தார் பதவிக்கான பட்டியலை தயார் செய்யும்படி வழக்கு தொடர்ந்தோம்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தகுதி அல்லது மதிப்பெண் அடிப்படையில், பணி விதிகளை பின்பற்றி, எங்களுக்கு சீனியாரிட்டி வழங்கும்படி, கடந்த மார்ச்சில் உத்தரவிட்டது.
இருந்தும், எங்களுக்கு சீனியாரிட்டி வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால், அது அவமதிப்பாகும்; சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
மனுக்கள், நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன், வழக்கறிஞர் எம்.லோகநாதன் ஆஜராகினர்.
இந்த வழக்கில், 27ம் தேதி ஆஜராகும்படி, வருவாய்த்துறை செயலர், ஆணையர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.