பா.ஜ.,வுக்கு ஓட்டு போடாத மக்களை மத்திய அரசு பழி வாங்குகிறது: அதிகாரத்தையும் பறிப்பதாக ஸ்டாலின் ஆவேசம்
பா.ஜ.,வுக்கு ஓட்டு போடாத மக்களை மத்திய அரசு பழி வாங்குகிறது: அதிகாரத்தையும் பறிப்பதாக ஸ்டாலின் ஆவேசம்
UPDATED : ஜூலை 28, 2024 01:11 AM
ADDED : ஜூலை 28, 2024 12:32 AM

சென்னை: 'பா.ஜ.,வுக்கு ஓட்டு போடாத மாநில மக்களை, மத்திய அரசு பழி வாங்குகிறது. மாநிலங்களின் அதிகாரத்தையும் பறிக்கிறது' என, முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் அடியோடு புறக்கணிக்கப்பட்டதாக கூறி, தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதே காரணத்தால், மாநிலங்களுக்கு நிதி வழங்குவது குறித்து நிடி ஆயோக் அமைப்பு நேற்று டில்லியில் நடத்திய ஆலோசனை கூட்டத்தை முதல்வர் புறக்கணித்தார்.
பிரதமர் தலைமையில் நடந்த அக்கூட்டத்தில், மேலும் ஏழு மாநில முதல்வர்கள் பங்கேற்காமல் ஒதுங்கினர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் ஏன் என்பதையும், டில்லிக்கு போகாமல் தவிர்த்தது ஏன் என்பதையும் மக்களுக்கு விளக்கும் வகையில் ஸ்டாலின் ஒரு வீடியோ அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை பல்வேறு மாநில மக்கள் புறக்கணித்தனர். அப்படி புறக்கணித்த மக்களை பழிவாங்கும் விதமாக மத்திய அரசு பட்ஜெட் அமைந்துள்ளது.
ஒட்டுமொத்த இந்தியர்களுக்காக உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை, 'இண்டியா' கூட்டணிக்கு ஓட்டளித்த மக்களை பழிவாங்க, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பயன்படுத்திக் கொண்டார். இந்திய அரசியல் சாசனத்தின் பெயரால் அவர் ஏற்றுக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கே முரணானது.
மத்திய பா.ஜ., அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. தமிழகத்துக்கு என அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்பு திட்டம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. பத்து ஆண்டுகள் ஆகியும் அது எந்த நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
பட்ஜெட்டுக்கு இரண்டு நாட்கள் முன்பு கூட, தமிழகத்தின் தேவைகளை நினைவூட்டினேன். அதில் ஒன்றை கூட நிதி அமைச்சர் ஏற்கவில்லை. 'தமிழ்நாடு' என்ற சொல்லே பட்ஜெட்டில் இல்லை. இத்தனை ஆண்டுகளாக, சும்மா ஒப்புக்காகவாவது ஒரு திருக்குறளை கூறி பட்ஜெட் வாசிப்பார். இந்த முறை திருவள்ளுவரும் கசந்து விட்டார் போல.
தமிழகம் மிகவும் எதிர்பார்த்தது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான மத்திய அரசின் நிதி. கொரோனா தொற்று காலத்தில் சென்னைக்கு வந்து அதை துவக்கி வைத்ததே உள்துறை அமைச்சர் அமித் ஷா தான்.
தமிழக அரசுடன் இணைந்து 63,000 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றுவோம் என நிதி அமைச்சரே 2021 பட்ஜெட்டில் அறிவித்தார். ஆனால், இன்று வரை ஒரு ரூபாய் கூட தரவில்லை.
எத்தனையோ முறை கேட்டும் பலன் இல்லை. கோவை, மதுரை மாநகரங்களில், மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து மூச்சே விடவில்லை. வலியுறுத்தி கேட்டதற்கு, மெட்ரோ ரயில் என்பது மாநில அரசின் திட்டம் என பார்லிமென்டிலேயே பதில் தருகின்றனர்.
அப்படி என்றால், இணைந்து செயல்படுத்துவோம் என்ற வாக்கு என்னாயிற்று? மாநில அரசின் திட்டம் என்றால் இனிமேல் ரயில்வேயை மாநிலங்களிடம் ஒப்படைத்து விடுவீர்களா?
அப்பட்டமான பாரபட்சம்
கடந்த ஆண்டு இரண்டு முறை தமிழகத்தை புயல் தாக்கியது. நிதி அமைச்சரே வந்து சேதங்களை பார்வையிட்டார்; உதவி செய்வதாக உறுதி அளித்தார்.
ஆனால், 37,000 கோடி கேட்டதற்கு, வெறும் 276 கோடி ரூபாய் தந்து ஏமாற்றி விட்டார். அதே சமயம், தங்கள் பதவி நாற்காலிக்கு கால்களாக முட்டுக் கொடுக்கும் இரண்டு மாநிலங்களுக்கு, 30,000 கோடி ரூபாய்க்கு மேல் அள்ளி வழங்கி இருக்கிறார். இதைக்காட்டிலும் அப்பட்டமான பாரபட்சம் இருக்க முடியாது.
தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன என்பதை உணர்ந்து திருத்திக் கொள்வதற்கு பதிலாக, பா.ஜ., அரசு மேலும் மேலும் தவறு செய்கிறது.
இதனால், மேலும் மேலும் தோல்வியை சந்திப்பீர்கள். பார்லிமென்டில் இரு சபைகளும் கொந்தளிப்பதுபோல, இந்திய மக்களின் மனங்களும் கொந்தளிப்பில் இருக்கிறது. இதற்கு பா.ஜ., பதில் சொல்லியே தீர வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
அதிகாரம் தந்தது யார்?
ஏற்கனவே நடந்து வரும் திட்டங்களுக்கான நிதியை குறைக்கும் வஞ்சக முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையை முடக்கும் வகையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட நிதியைக் கூட நிறுத்தி வைத்துள்ளனர்.
கேட்டால், தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவோம் என ஒப்புக்கொண்டால்தான் நிதி தருவார்களாம். மாணவர்களின் கல்வி பாழாகுமே, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் போகுமே என்றெல்லாம் அவர்களுக்கு கவலையே இல்லை. தங்களின் கொள்கை திணிப்பையும், ஹிந்தி திணிப்பையும் மட்டுமே பா.ஜ., அரசு முன்னிறுத்துகிறது.
மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமல், மாநிலங்களால் விதிக்கப்படும் முத்திரைத்தாள் கட்டணத்தை குறைப்போம் என, பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ஜி.எஸ்.டி.,யால் தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்பை சரி கட்டுவதற்கான, 20,000 கோடி ரூபாய் இழப்பையே இன்னும் அளிக்காத மத்திய அரசுக்கு, மாநிலங்களின் வரி விதிப்பை மாற்றும் அதிகாரத்தை யார் கொடுத்தது?