ஜி.எஸ்.டி., கவுன்சில் 53வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: வர்த்தகர்கள் வரவேற்பு
ஜி.எஸ்.டி., கவுன்சில் 53வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: வர்த்தகர்கள் வரவேற்பு
ADDED : ஜூன் 23, 2024 04:12 PM

திருப்பூர்: ஜி.எஸ்.டி., கவுன்சிலின் பரிந்துரைகள், நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜி.எஸ்.டி., கவுன்சில் 53வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், டில்லியில் நடந்தது. கவுன்சிலின் பல்வேறு பரிந்துரைகள், நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் கூறியதாவது:
கடந்த 2017 - 18, 2018 - 19 மற்றும் 2019 - 20 நிதியாண்டுகளில், சிறு தவறுகளுக்காக, ஜி.எஸ்.டி., சட்ட பிரிவு 73ன் கீழ் ஏராளமான வர்த்தகர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் வரி, வட்டி, அபராதம் என, பெருந்தொகையை அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது.
ஏமாற்றுதல் மற்றும் மோசடி இல்லாத பட்சத்தில், வட்டி, அபராதம் தவிர்த்து, வரும் 2025, மார்ச் 31ம் தேதிக்குள் வரியை மட்டும் செலுத்தினால் போதும் என கவுன்சில் பரிந்துரைந்துள்ளது. இதனால் பெரும் நிதிச்சுமை தவிர்க்கப்படும்; வர்த்தகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
கலவை வரி செலுத்துவோர், ஆண்டுதோறும் ஜி.எஸ்.டி., ரிட்டர்ன் 4ஐ, ஏப்ரல் 30க்குள் தாக்கல் செய்ய வேண்டியிருந்தது; 2024 - 25 நிதியாண்டு முதல், இதற்கான கால அவகாசம், ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி., சார்ந்த மேல்முறையீடுகளுக்கு, தீர்ப்பாயத்துக்கு செலுத்த வேண்டிய டிபாசிட் தொகை, 20ல் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படிருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
'3பி' ரிட்டர்ன் தாக்கல் செய்யும்போது, வரி பாக்கி இருந்தாலும், வர்த்தகரின் ஜி.எஸ்.டி., ரொக்க பதிவேட்டில் இருப்பு தொகை இருந்தால், நிலுவை வரிக்கு வட்டி செலுத்தவேண்டிய அவசியமில்லை. இந்த நடைமுறை, 2017 என்ற முன்தேதியிட்டு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருப்பது வர்த்தகர்களுக்கு பயனளிக்கும்.
பிளாட்பார்ம் கட்டணம், காத்திருப்பு அறைக்கு சேவை வரி விலக்கு, சோலார் குக்கர், அட்டைப்பெட்டி உள்ளிட்ட காகித பேக்கிங் பொருட்களுக்கு 12 சதவீதம் என்ற ஒரே வரி விதிப்பு என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள ஜி.எஸ்.டி., கவுன்சிலின் பரிந்துரைகள், நடைமுறைக்கு வரும்போது, வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயனளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.