12ல் மேட்டூர் அணை திறப்பு இல்லை நீர் வரத்து பார்த்து அரசு முடிவு செய்யும்
12ல் மேட்டூர் அணை திறப்பு இல்லை நீர் வரத்து பார்த்து அரசு முடிவு செய்யும்
ADDED : ஜூன் 08, 2024 01:27 AM
சென்னை:''தற்போதைய சூழ்நிலையில், வரும் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை,'' என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் 30 சதவீதத்திற்கு மேலான விவசாயிகள் தென்னை விவசாயம் செய்கின்றனர். கொப்பரை விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. கொப்பரை தேங்காயை கூடுதலாக கொள்முதல் செய்ய வேண்டும் என, முதல்வர் பரிந்துரைத்தார்.
அதை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. தற்போது, மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை, கிலோவுக்கு 8 ரூபாய் உயர்த்தி உள்ளது.
வெளி மார்க்கெட்டிலும் தற்போது கொப்பரை தேங்காய் விலை அதிகரித்துள்ளது. தேங்காய் விலை உயர்ந்திருப்பது, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளம் வரும் அளவிற்கு, கோடை மழை இல்லை. பயிர்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை. எனினும், பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து, வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உதவ, 36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது.
மேட்டூர் அணையில் தற்போதுள்ள சூழ்நிலையில், வரும் 12ல் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை. தண்ணீர் வரத்தை பொறுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
விவசாயத்திற்கு தேவையான விதைகள், இடுபொருட்கள், உரங்கள் இருப்பு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் அன்பரசன் கூறியதாவது:
தமிழகத்தில் ஆண்டுக்கு 2,186 கோடி ரூபாய்க்கு தென்னை பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். ஆண்டுக்கு 5,361 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் தென்னை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தி.மு.க., அரசு வந்த பின், பேராவூரணி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை உட்பட ஐந்து இடங்களில், 42.38 கோடி ரூபாயில் கயிறு குழுமம் அமைக்கப்படுகிறது.
கயிறுக்கு தனி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. தென்னை பொருட்களுக்கு அதிக விலை கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.