ADDED : ஜூலை 13, 2024 03:49 AM

சென்னை: இரு தினங்களுக்கு முன், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பொறுப்பேற்றார். அவர், ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளார். அதற்காக சரகம் வாரியாக ஆய்வு கூட்டம் நடத்தி உத்தரவுகள் பிறப்பித்து வருகிறார்.
ஆய்வு கூட்டத்திற்கு பின், அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 978 டி.எஸ்.பி.,க்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் முறையாக வேலை செய்யவில்லை என்றால், சுழற்சி முறையில் பணியிட மாற்றம் செய்யப்படுவர். இனி, காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்களின் பணித்திறனுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்படுவர்.
கொலை வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யுங்கள். அரசியல் ரீதியான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுங்கள். ஏன் கைது செய்தீர்கள் என கேள்வி வந்தால், அதற்கான பதிலை கூறுங்கள். அரசியல் அழுத்தங்களுக்கு பணிய வேண்டாம்.
காவல் துறையினர் அடிப்படை பணிகளை செய்தாலே, குற்றங்கள் கட்டுக்குள் வந்து விடும். மக்கள் தரும் புகார்கள் மீது, எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்கள் முறையாக விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், மண்டல ஐ.ஜி.,க்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பணியின் போது, எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்கள் கட்டாயம் கைத்துப்பாக்கி வைத்திருக்க வேண்டும். கைத்துப்பாக்கியை எந்த நேரத்தில், எப்படி பயன்படுத்த வேண்டும் என, உயர் அதிகாரிகள் பயிற்சி அளிக்க வேண்டும்.
எஸ்.ஐ.,க்கள், மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும். அதேபோல, கான்ஸ்டபிள், தலைமை காவலர்கள் கைகளில், 'லத்தி' இருக்க வேண்டும். லத்தியுடன் தான் ரோந்து செல்ல வேண்டும். அப்போது தான், குற்றங்களை குறைக்க முடியும்; குற்றவாளிகளும் அச்சப்படுவர்.
இவ்வாறு கூறியுள்ளார்.