தனியார் பால் கொள்முதல் விலை குறைப்பு: ஆவினுக்கு திரும்பும் உற்பத்தியாளர்கள்
தனியார் பால் கொள்முதல் விலை குறைப்பு: ஆவினுக்கு திரும்பும் உற்பத்தியாளர்கள்
ADDED : ஜூலை 05, 2024 08:19 AM

சென்னை: 'அமுல்' மற்றும் தனியார் பால் நிறுவனங்களின், கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளதால், ஆவினுக்கு, பால் உற்பத்தியாளர்கள் திரும்பி வருகின்றனர்.
தமிழகத்தில், 9,198 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றில், 3.91 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்கள் வாயிலாக, நாள்தோறும், ஆவின் நிறுவனத்திற்கு பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
முந்தைய ஆட்சியில், 40 லட்சம் லிட்டர் வரை அதிகரித்த ஆவின் பால் கொள்முதல், படிப்படியாகக் குறைந்து, 26 லட்சம் லிட்டரானது. கொள்முதலை அதிகரிப்பதற்கு, ஆவின் வாயிலாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.
கொள்முதல் உயர்வு
பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டது. கறவை மாடுகள் வாங்குவதற்கு கடனுதவி வழங்கப்பட்டது. பால் கொள்முதல் நிலையங்களில், கொழுப்புச் சத்து ஆய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப விலை வழங்கப்பட்டு வருகிறது.
இது, பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், ஆவின் பால் கொள்முதல் படிப்படியாக உயர்ந்து, தற்போது 35 லட்சம் லிட்டரை தொட்டுள்ளது.
ஒரு லிட்டர் பசும்பால் 35 ரூபாய்க்கும், எருமை பால் 44 ரூபாய்க்கும் கொள் முதல் செய்யப்படுகிறது.
இதுமட்டுமின்றி; தரமான பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு, லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் பால் உற்பத்தி கணிசமாக அதிகரித்து உள்ளதால், தனியார் நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களுடைய பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துள்ளன.
அமுல் நிறுவனத்தால், கிருஷ்ணகிரி, திருவண்ணா மலை மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் பால் விலையும் குறைக்கப்பட்டு உள்ளது.
இதனால், அவர்களுக்கு பால் வழங்கி வந்த உற்பத்தியாளர்கள் பலரும் ஆவினுக்கு திரும்பத் துவங்கியுள்ளனர். இதனால், ஆவின் பால் கொள்முதல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
தட்டுப்பாடின்றி கிடைக்கும்
இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத் கூறியதாவது:
பால் உற்பத்திக்கான காலநிலை சிறப்பாக உள்ளது. ஆவின் வாயிலாக வழங்கப்படும் கொள்முதல் விலையும் திருப்திகரமாக இருப்பதாக, பால் உற்பத்தியாளர்கள் உணர்ந்துள்ளனர்.
எனவே, ஆவின் பால் கொள்முதல் 35 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. இது 40 லட்சம் லிட்டர் வரை உயரலாம் என தோராயமாக மதிப்பிடப்பட்டு உள்ளது. பால் கொள்முதல் அதிகரித்து உள்ளதால், விற்பனைக்கு போக எஞ்சிய பாலில், மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருட்கள் உற்பத்தியும் அதிகரிக்கப்பட உள்ளது.
இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. எனவே, இனிவரும் நாட்களில் ஆவின் பொருட்கள் தட்டுப்பாடின்றி பாலகங்களில் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு லிட்டர் பசும்பால் 35 ரூபாய்க்கும், எருமைப்பால் 44 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது