ரோடு கான்ட்ராக்ட் எடுக்கும் 'ஹைவேஸ்' அதிகாரிகள் கோவையில் கள ஆய்வில் இறங்கியது விசாரணைக்குழு
ரோடு கான்ட்ராக்ட் எடுக்கும் 'ஹைவேஸ்' அதிகாரிகள் கோவையில் கள ஆய்வில் இறங்கியது விசாரணைக்குழு
ADDED : ஜூன் 07, 2024 09:14 PM
கான்ட்ராக்டர்கள் பெயர்களில் ஒப்பந்தப்பணிகளை எடுத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளே ரோடு வேலைகளைச் செய்வது குறித்து, அரசு அமைத்த குழு, கோவையில் நேற்று விசாரணையைத் துவக்கியுள்ளது.
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்படும் பணிகளில் 90 சதவீதப் பணிகளை, இத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவு தான் மேற்கொள்கிறது.
துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில், பெருமளவு நிதியும் இந்தப் பிரிவுக்கே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதிலும் ரோடு சீரமைப்புப் பணிக்கே, பல நுாறு கோடி ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கப்படுகிறது.
இப்பணிகளை, பிரித்து பிரித்து வழங்குவதில், மிகப்பெரிய முறைகேடு நடந்து வருகிறது. 15 லட்சம் ரூபாய்க்கும் குறைந்த மதிப்பு பணிகளுக்கு, பேப்பர்களில் விளம்பரம் கொடுக்காமல், டெண்டர் விடும் அதிகாரம், கோட்டப் பொறியாளர்களுக்கு இருப்பதால் இப்படி வழங்கப்படுவது அதிகரித்துள்ளது.
இத்தகைய பணிகளை, சின்ன சின்ன கான்ட்ராக்டர்கள் பெயர்களில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளே எடுத்துச் செய்வது தெரிய வந்துள்ளது.
பணிக்கு ஒதுக்கப்படும் தொகையில், 10 சதவீதத்தை கான்ட்ராக்டருக்கு வழங்கி விட்டு, பெயரளவில் பணியைச் செய்து விட்டு, மீதித் தொகையை அதிகாரிகள் சுருட்டிக் கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
கோவையில் இந்த முறைகேடு அதிகளவில் நடந்து, துறைச் செயலருக்கு அங்குள்ள ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் புகாராகவே அனுப்பியுள்ளது.
இது குறித்த செய்தி, 'கான்ட்ராக்டர்களாக மாறிய ஹைவேஸ் அதிகாரிகள்' என்ற தலைப்பில், நம் நாளிதழில் ஜூன் 2 அன்று வெளியானது. இதன் எதிரொலியாக, இதுபற்றி விசாரிப்பதற்கு துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.
நெடுஞ்சாலைத்துறை திருச்சி கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணசாமி தலைமையில், கோட்டப் பொறியாளர், உதவி கோட்டப் பொறியாளர் மற்றும் இரு உதவிப் பொறியாளர்கள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிப்., 15 அன்று டெண்டர் வெளியிட்டு, மே 15ல் ஒப்பந்தம் போட்டு, மேற்கொண்ட பல்வேறு ரோடு சீரமைப்புப் பணிகள் குறித்து, குழு விசாரணை மேற்கொள்கிறது.
கோவையில் விசாரணை!
இந்தக் குழு அதிகாரிகள், கோவைக்கு நேற்று வந்து, தங்களுடைய விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
விசாரணைக் குழு அதிகாரிகள், நேற்று காலையில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, சீரமைப்புப் பணி நடந்த ரோடுகளில், கள ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின், நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் ஆவணங்களை பெற்று ஆய்வு செய்தனர்.
விசாரணையை நேர்மையாக நடத்தி, தவறு செய்தவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, கோவை மக்களின் எதிர்பார்ப்பு.
-நமது சிறப்பு நிருபர்-