அதிகாலை பயணத்தில் விபத்து; கட்டுப்பாடு இழந்த ஆம்னி பஸ் மோதி நால்வர் பலி
அதிகாலை பயணத்தில் விபத்து; கட்டுப்பாடு இழந்த ஆம்னி பஸ் மோதி நால்வர் பலி
ADDED : மே 17, 2025 08:58 AM

கரூர்: கரூர் அருகே, இன்று (மே 17) அதிகாலையில், டிரைவரின் கட்டுப்பாடு இழந்த ஆம்னி பஸ், வேன் மீது மோதியதில் சுற்றுலாப் பயணிகள் நால்வர் உயிரிழந்தனர்.
பெங்களூரில் இருந்து நாகர்கோவில் சென்ற ஆம்னி பஸ் (இன்டர்சிட்டி ஸ்மார்ட் பஸ்), கரூர் செம்மடை அருகே டிராக்டர் மீது மோதியது. மோதிய ஆம்னி பஸ், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிர்ப்புறத்துக்கு சென்று எதிர் திசையில், கோவில்பட்டியில் இருந்து ஏற்காடு சுற்றுலா செல்வதற்காக பயணிகள் 20 பேர் வந்த வேன் மீது மோதியது.
இதில், சுற்றுலா வேனில் வந்த மூன்று பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். இன்னொருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும், 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மீட்பு படை வீரர்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிலர் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலை பயணத்தை தவிருங்கள்!
இந்த விபத்து அதிகாலை 5:30 நடந்துள்ளது. இரவு நீண்ட நேரம் கண்விழித்து வாகனம் ஓட்டுவது டிரைவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே இரவு, அதிகாலை பயணத்தை தவிர்ப்பது நல்லது.