இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு: அமித் ஷாவிடம் ஆதீனம் கோரிக்கை
இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு: அமித் ஷாவிடம் ஆதீனம் கோரிக்கை
ADDED : ஜூன் 09, 2025 01:51 AM

மதுரை: இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும்; கச்சத்தீவை மீட்டு இந்திய மீனவர்கள் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு கொடுத்தார்.
மதுரை ஒத்தக்கடையில், பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த அமித் ஷா, முன்னதாக நேற்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தார்.
வரும் வழியில் மடத்தில் காத்திருந்த மதுரை ஆதீனத்தை பார்த்ததும், காரை விட்டு அமித் ஷா இறங்கினார். அவருக்கு ஆதீனம், காவி நிற சால்வை அளித்தார். பின், மனு ஒன்றையும் அமித் ஷாவிடம் வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட அமித் ஷா நன்றி தெரிவித்து கோவிலுக்கு சென்றார்.
இதையடுத்து ஆதீனம் கூறுகையில், “அமித் ஷாவை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும்.
''இந்திய மீனவர்கள் பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும் என கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தேன். நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்,” என்றார்.
பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த போதும், மதுரை ஆதீனம் தன் மடத்திற்கு வெளியே காத்திருந்து, அவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார்.