ADDED : ஜூன் 03, 2025 05:54 AM

சென்னை : கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து, வெளி ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரயில் மற்றும் பஸ்களில் இடம் கிடைக்காததால், பலரும் கடைசி நேரத்தில், விமானங்களை தேர்வு செய்து சென்னை திரும்புகின்றனர். இதனால், சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் நேற்று காலை முதல் பயணியர் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
மதுரை, துாத்துக்குடி, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து, சென்னை வருவோர் எண்ணிக்கை அதிகரித்துஉள்ளதால், அந்த வழித்தடங்களுக்கான விமான கட்டணம், சாதாரண நாட்களை விட பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வரை, குறைந்த கட்டணத்தில் கிடைத்த டிக்கெட்டுகள், தற்போது ஆயிரக்கணக்கில் அதிகரித்திருப்பது பயணியரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே, பள்ளி திறப்பை ஒட்டி, கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.