'இணைநோய் உள்ளவர் கவனம்' சுகாதார துறையினர் அறிவுறுத்தல்
'இணைநோய் உள்ளவர் கவனம்' சுகாதார துறையினர் அறிவுறுத்தல்
ADDED : ஜன 05, 2024 01:44 AM
திருப்பூர்:'ஜே.என். 1 கொரோனா மெல்ல வேகமெடுக்க துவங்கியுள்ளதால் இணை நோய் உள்ளவர்கள் தங்கள் உடல் நலனில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்' என சுகாதாரத்துறை அறிவுறத்தியுள்ளது.
தமிழகத்தில் நேற்று மாலை வரை 29 பேருக்கு ஜே.என். 1 கொரோனா உறுதியாகியுள்ளது. அண்டை மாநிலங்களில் ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் தமிழகத்தில் பாதிப்பு குறைவாக உள்ளது.
இருப்பினும் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லாத நோயாளிகள் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதியவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் அறிகுறி பாதிப்புக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
அரசு தனியார் மருத்துவமனைகளில் புதிதாக அனுமதியாகிறவர்களில் 70 வயதுக்கு மேற்பட்டோர் என்ன காரணத்தினால் தொடர் சிகிச்சை மேற்கொள்கின்றனர் என்ற விபரத்தை அந்தந்த வட்டார சுகாதாரத்துறையினர் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு பகுதியில் பலரும் காய்ச்சல் சளி இருமல் பாதிப்பு தொடர்ந்தால் அப்பகுதியில் உடனடியாக மருத்துவ முகாம் அமைத்து தொற்று பரவல் உண்டா என்பதை கண்டறிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறையினர் கூறியதாவது:
இணை நோய் உள்ளவர்களை வைரஸ் எளிதில் தாக்கும் வாய்ப்புள்ளது. அதனை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவு ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
தினசரி உடற்பயிற்சி முககவசம் அணிதல் தனிநபர் இடைவெளி அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் ஆரோக்கியமான உணவு உண்ணுதல் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தகுந்த முன்னெச்சரிக்கை தவறாமல் பின்பற்றிட வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

