மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விபத்து பைக்கில் சென்றவர் பரிதாப பலி
மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விபத்து பைக்கில் சென்றவர் பரிதாப பலி
UPDATED : ஜூன் 14, 2025 05:07 AM
ADDED : ஜூன் 14, 2025 05:05 AM

சென்னை: சென்னையில் இரண்டாவது கட்டத்தில், மொத்தமுள்ள மூன்று வழித்தடங்களில் சோழிங்கநல்லுார் - மாதவரம் வழித்தடத்தில் 44.6 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இந்த தடத்தில், பெரும்பாலாலும் மேம்பால பாதை வழியாக அமைகிறது. பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட துாண்களில், மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த வழித்தடத்தில், போரூரில் இருந்து நந்தம்பாக்கம் பகுதி வரை மெட்ரோ ரயில்வே மேம்பாலத்தின் கீழ், 30 அடி உயரத்தில் வாகனங்கள் செல்லும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை இணைப்பு பாலம் அமைக்கும் பணிகளும் சேர்ந்து நடந்து வருகின்றன.
இதற்காக, இரண்டு துாண்கள் மத்தியில் 'கர்டர்' எனப்படும், ராட்சத கான்கிரீட் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான, பணிகளை எல் அண்டு டி., நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ராமாபுரம், எல் அண்ட் டி., நிறுவனம் அருகே, மெட்ரோ ரயில் மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் வாகனங்கள் மேம்பாலத்தில், நேற்று முன்தினம் இரவு, 40 அடி நீளமுள்ள 'கர்டர்' பொருத்தப்பட இருந்தது. அப்போது, இரவு 9:00 மணியளவில் கார்டர் திடீரென சரிந்து சாலையில் விழுந்தது.
அப்போது, பரங்கிமலையில் இருந்து போரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற, நாகர்கோவிலை சேர்ந்த ரமேஷ், 47, என்பவர், கான்கிரீட் பாலத்தில் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இவர், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர். சூளைமேட்டில் உள்ள தனியார் பில்லிங் மஷின் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பணி முடித்து வீட்டிற்கு திரும்பும் வழியில், கார்டர் விழுந்ததில், அதன் அடியில் சிக்கி இறந்துள்ளார்.
![]() |
ஐந்து மணிநேர போராட்டத்திற்கு பின், கர்டர் அகற்றப்பட்டு, அதன் அடியில் சிக்கியிருந்த ரமேஷின் உடல் மீட்கப்பட்டது. சம்பவ இடத்தில், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கர்டர் அகற்றப்பட்ட பின், சேதடைந்திருந்த சாலை உடனடியாக செப்பனிடப்பட்டது. நேற்று காலை முதல் அவ்வழியே இலகுரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. பின், காலை 11:00 மணிக்கு பின் அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன.
இந்த கர்டர் விழுந்ததில், சாலையில் புதைக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. சிறிது சிறிதாக வெளியேறி தண்ணீர், பரங்கிமலை - பூந்தமல்லி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு, குழாய் உடைந்த பகுதியை சீரமைக்கும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.