விவசாயிகளின் கஷ்டத்தை அறியாத போலி விவசாயி ஸ்டாலின்: பழனிசாமி
விவசாயிகளின் கஷ்டத்தை அறியாத போலி விவசாயி ஸ்டாலின்: பழனிசாமி
ADDED : ஜூன் 14, 2025 03:54 AM

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடந்த, விவசாய கண்காட்சி விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், விவசாயிகளின் நலனுக்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதாக ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்; அதில், என்னைப் பற்றியும் பேசியுள்ளார்.
சேலம், தலைவாசலில், 1,100 ஏக்கரில், 1,025 கோடி ரூபாயில் கால்நடைப் பூங்காவின் ஒரு பகுதியை,கடந்த 2021 பிப்., 22ல் திறந்து வைத்தேன். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், கலப்பின பசு, ஆடு,கோழி இன ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
வேளாண் உப தொழில்களால், விவசாயிகளின் வருவாய் பல மடங்காக உயர்ந்திருக்கும். ஆனால், இத்திட்டத்தை நிறைவேற்றாமல், விவசாயிகளின் வயிற்றில், தி.மு.க., அரசு அடித்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின், 80 சதவீதப் பணிகளை முடித்தோம், அதற்கு 'ஸ்டிக்கர்' ஒட்டி திறந்த தி.மு.க., அரசு, அதன் இரண்டாவது கட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது.
கடந்த 2017- -18 முதல்2021 வரை, 4 ஆண்டுகளுக்கு பயிர் காப்பீடாக, 12,000 கோடி ரூபாயை அ.தி.மு.க., அரசு பெற்று தந்தது. தமிழக விவசாயிகளுக்கு புதிதாக எந்தத் திட்டத்தையும் கொண்டு வராமல், தன்னைத் தானே புகழும், போலி விவசாயி முதல்வர் ஸ்டாலின்.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மீது, குண்டர் சட்டம் பாய்ச்சிய, போலி விவசாயி ஸ்டாலினை, விவசாயிகள் மறக்க மாட்டார்கள்.
குடிமராமத்துத் திட்டம், புதிய தடுப்பணைகள், விவசாயிகளுக்கு இலவச வண்டல் மண் என, அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களால், தமிழகமெங்கும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. தலைவாசலில் கரும்பு தோட்டத்தில், கான்கிரீட் சாலையில், 'கோட் ஷூட்' அணிந்து நடந்து சென்ற,போலி விவசாயி நான் அல்ல.
பிறந்தது முதல் இன்று வரை, எனது குடும்பம் விவசாயக் குடும்பம், நான் ஒரு விவசாயி. இன்றும், விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விவசாயிகளின் கஷ்டங்களை முழுமையாக அறிந்தவன். விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத, விவசாயிகளின் கஷ்டத்தையும், வியர்வையையும், வேதனையும் அறியாத, ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டுமே.
வரும் 2026 சட்டசபை தேர்தலில், யார் உண்மையான விவசாயி, தமிழக மக்களின் நலனுக்காக பாடுபட்டது யார் என்பதை சீர்துாக்கிப் பார்த்து, தமிழக மக்கள் தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.