ADDED : ஜூன் 05, 2025 03:19 AM
சென்னை:சென்னையைச் சேர்ந்தவர் லிங்கபெருமாள். இவர், தமிழ்நாடு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நல சங்கத்தை நடத்தி வருகிறார். இச்சங்கம் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், லிங்கபெருமாள் நேற்று அளித்துள்ள புகார்:
கடந்த மாதம் நடத்த, 'தக் லைப்' பட இசை வெளியீட்டு விழாவில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகரை சிறப்பு விருந்தினராக அழைத்து, அவர் முன்னிலையில், 'கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது' என, நடிகர் கமல் பேசியுள்ளார்.
தன் பட விளம்பரத்திற்காக, மொழிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, தேவையற்ற சமூக பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்.
பேச்சுரிமை என்ற பெயரில், நாட்டில் வன்முறையையும், பிரிவினையையும் துாண்டும் வகையில் பேசி இருக்கும் கமலை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.