நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமை செயலாளர் ஆஜராக உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமை செயலாளர் ஆஜராக உத்தரவு
ADDED : ஜூன் 20, 2025 12:35 PM

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தற்போதைய தலைமை செயலாளர் முருகானந்தம், முன்னாள் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆகியோர் ஜூலை 21ல் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக, நீதிபதி பட்டு தேவானந்த் உத்தரவிட்டுள்ளார்.
அரசு பணியில் இருப்பவர்கள், பணிக்காலத்தில் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இதில், பல்வேறு நடைமுறை சிரமங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன.
இது குறித்த வழக்கை 2023ல் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கருணை அடிப்படை பணி நியமனத்துக்கான நடைமுறை சிக்கல்களை களைவதற்கும், இதற்கு கால நிர்ணயம் செய்யப்படவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
எனினும், இது தொடர்பான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்ற நிலையில், நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில், 2023 முதல் தற்போது வரை தலைமை செயலாளர்களாக இருந்தவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி பட்டு தேவானந்த் உத்தரவிட்டார்.வழக்கு ஜூலை 21க்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும், அன்றைய தினம் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதன்படி தற்போதைய தலைமை செயலாளர் முருகானந்தம், முன்னாள் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆகியோர் ஜூலை 21ல் நேரில் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.