சாலையில் கழன்று ஓடிய அரசு பஸ் சக்கரங்கள்; தென்காசியில் அதிர்ச்சி!
சாலையில் கழன்று ஓடிய அரசு பஸ் சக்கரங்கள்; தென்காசியில் அதிர்ச்சி!
UPDATED : ஜூன் 20, 2025 12:24 PM
ADDED : ஜூன் 20, 2025 12:17 PM

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைக்கால் என்ற இடத்தில், 87 பயணிகளுடன் சென்ற அரசு பஸ்சில், பின்புற ஆக்சில் உடைந்த நிலையில், சக்கரங்கள் தனியாக கழன்று ஓடின. பயணிகள் காயங்களுடன் தப்பினர்.
மதுரையில் இருந்து குற்றாலத்திற்கு பயணிகள் 87 பேர் உடன் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைக்கால் என்ற இடத்தில் பஸ்சின் பின்பக்க ஆக்சில் துண்டிக்கப்பட்டது. இதில், பின் சக்கரங்கள் இரண்டும் திடீரென கழன்று ஓடின.
பஸ் பெரும் சத்தத்துடன் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பஸ்சில் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த மாணவர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை, அருகே இருந்தவர்கள் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். பஸ் சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியதால் பஸ்சில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதையடுத்து பஸ் டிரைவர், கண்டக்டர் இணைந்து பயணிகளுக்கு மாற்று பஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். சாலையில் திடீரென பஸ் சக்கரங்கள் கழன்று ஓடிய போது அந்த வழியாக எந்த வாகனங்களும் வரவில்லை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இது குறித்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:நடந்த சம்பவம் குறித்து உரிய அலுவலரிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அந்த பஸ்சை முறையாக பராமரிக்காத அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.