UPDATED : ஜூலை 13, 2024 05:21 PM
ADDED : ஜூலை 12, 2024 05:02 PM

சென்னை: போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் பெற்று மோசடி செய்ததாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சி.பி.சி.ஐ.டி., வழக்குப் பதிவு செய்தது.
எம்.பி., - எம்.எல்.ஏ., க்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதன் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கும்படி, செந்தில் பாலாஜி தரப்பில் கோரிய மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவின் விசாரணை, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் முடிந்துள்ளது.
மேல்முறையீடு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பை தள்ளி வைக்கக்கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி அல்லி நேற்று தள்ளுபடி செய்தார்.
விடுவிக்கக் கோரிய மனுவின் உத்தரவை, வரும் 16ம் தேதி பிறப்பிப்பதாக தெரிவித்ததோடு, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும், வரும் 16ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.