இயற்கையை சுரண்டுவதற்கு முடிவுரை எழுத வேண்டும்: கனிமவள கொள்ளையரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு
இயற்கையை சுரண்டுவதற்கு முடிவுரை எழுத வேண்டும்: கனிமவள கொள்ளையரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 22, 2025 06:53 AM

கோவை: கோவையில் நடக்கும் கனிமவள கொள்ளைக்கு, காரணமானவர்களை கைது செய்து இயற்கையை சுரண்டும் அவலத்துக்கு, முடிவுரை எழுத வேண்டும் என்று, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவையிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய, ஆற்றுப்படுகைகளிலும் வனப் பகுதிகளிலும், கனிமவளங்கள் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. கோர்ட் தலையிட்ட பின் கலெக்டர், எஸ்.பி. கனிமவளம், வனம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், கண்காணித்து வருவதாக சொன்னாலும், இன்றும் கேரளாவுக்கு கனிமவளம் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.
கடத்தல் நடப்பது எப்படி கனிமவளங்களை குவாரியிலிருந்து, கிரஷருக்கு எடுத்துச்செல்வதற்கு, மாற்றுநடைச்சீட்டு (டிரான்சிட் பாஸ்), குவாரியிலிருந்து கனிமவளம் பயன்டுத்தும் இடத்துக்கு எடுத்து செல்ல, போக்குவரத்து நடைச்சீட்டு(டிரான்ஸ்போர்ட் பர்மிட்) பயன்படுத்தப்பட்டு வந்தது.
கனிமவளத்துறை அதிகாரிகள் அச்சிட்டு வைத்திருக்கும், பயணச்சீட்டுகளை அரசியல் செல்வாக்குள்ள நபர்கள் பெற்று, அதை கனிமவளம் ஏற்றிச்செல்லும் லாரிகள் ஒவ்வொன்றுக்கும், 1,000 ரூபாய் என்ற வீதத்தில் விற்பனை செய்கின்றனர்.
அதிகாரிகள் சோதனையிடும்போது, அவர்களே அதில் வாகனப்பதிவு எண், என்ன கனிமவளம், எவ்வளவு எடை உள்ளிட்ட விவரங்களை எழுதி சமர்ப்பிக்கின்றனர். இது மட்டுமல்லாமல், ஒரு முறை வழங்கிய டிரான்சிட் பாஸ் மற்றும் டிரான்ஸ்போர்ட் பாஸ் ஆகியவற்றை, கலர்ஜெராக்ஸ் எடுத்து தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
அந்த ஜெராக்ஸ் நகல்கள் சிக்கியதால், அதை ஆதாரமாக வைத்து, கோவை புலியகுளத்தை சேர்ந்த சிவா மற்றும் நல்லுார் வயலை சேர்ந்த லோகநாதன் ஆகியோர், ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். நடந்தது விசாரணை இந்த வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் படிமுகிலன், கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கனிமவளம் அள்ளி கடத்துவதை தடுக்க, எஸ்.பி.சண்முகப்பிரியா தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்துள்ளனர். இக்குழுவினர் விசாரணை நடத்தி, பேரூரில் செயல்பட்டு வந்த சட்ட விரோத குவாரியை கண்டுபிடித்தனர். மதுக்கரையில் உள்ள குவாரியில் இருந்து, மணல் எடுத்து வந்ததை உறுதி செய்தனர்.
இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது. வெளியூர்களிலிருந்து( புதுக்கோட்டை டீம்) கோவைக்கு வந்து, மணல் கடத்தலில் ஈடுபடுவதாக, புலனாய்வு குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர். பின்னணி நபர் மீதும் நடவடிக்கை இதையடுத்து நீதிபதிகள், 'இதற்கு முன் மணல் கடத்தலில் ஈடுபடும் லாரியை பறிமுதல் செய்து லாரி ஓட்டுநர், லாரி உரிமயைாளர் மீது மட்டுமே, வழக்குப் பதிவு செய்யும் நடைமுறை இருந்தது; இனி மணல் கடத்தலுக்கு பின்னணியில் செயல்படும் நபர்களையும், கூண்டோடு கைது செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை அக்.10க்கு தள்ளிவைத்துள்ளனர்.
வழக்கு தொடுத்த சிவா கூறுகையில், ''இயற்கையை சுரண்டி சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், இது போன்ற நபர்களை விட்டு வைக்கக்கூடாது. கடுமையான நவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் பல எதிர்ப்புகளையும் மீறி நாங்கள் ஈடுபட்டுள்ளோம்,'' என்றார்.