சட்டவிரோதமாக மண் கடத்தல்: கையகப்படுத்தவுள்ள நிலங்களில் தான் இந்த களேபரம்
சட்டவிரோதமாக மண் கடத்தல்: கையகப்படுத்தவுள்ள நிலங்களில் தான் இந்த களேபரம்
UPDATED : ஜூன் 27, 2025 08:09 AM
ADDED : ஜூன் 27, 2025 06:30 AM

சூலுார்: சூலுார் விமானப்படைத் தளத்தை சுற்றியுள்ள இடங்களில், சட்டவிரோதமாக செம்மண், கிராவல் மண் எடுக்கப்பட்டு, லாரிகளில் கடத்தப்படுகிறது. பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், படைத் தளத்தின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது.
சூலுார் அடுத்த காங்கயம் பாளையத்தில் விமானப்படைத் தளம் உள்ளது. சுற்றிலும் மதில் சுவர் அமைக்கப்பட்டு, கேமராக்கள் வாயிலாக, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இந்த விமானப் படைத்தளத்தை விரிவாக்கம் செய்ய மேலும், கலங்கல், அப்பநாயக்கன்பட்டி, பருவாய் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள கலங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செம்மண் மற்றும் கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டு லாரிகளில் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
20 அடி பள்ளம்
இரவு நேரங்களில் மண் கடத்தும் கும்பல், பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணை அள்ளி லாரிகளில் கடத்துகின்றனர். கலங்கல் முதல் பருவாய் வரை பல இடங்களில், மண் எடுத்ததால், 20 அடி ஆழத்துக்கு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்களால், விமானப்படைத்தள பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: படைத்தள விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த உள்ளதாக, பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.
ஆனால், எடுப்பதாக தெரியவில்லை. இதனால், இடத்தின் உரிமையாளர்களே மண் எடுக்க துணையாக உள்ளதாக தெரிகிறது. ஒரு சிலர் மண் எடுக்க அனுமதிக்கவில்லை என, கூறப்படுகிறது. மொத்தத்தில் படைத் தளத்தை சுற்றி பல ஆயிரம் லோடு செம்மண் எடுத்து கடத்தப்பட்டு வருகிறது. வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கனிவள கொள்ளையை தடுக்க வட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கலெக்டர் உத்தரவிட்டும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. இதனால், சூலுார் வட்டாரத்தில் கனிம வள கொள்ளை அதிகரித்து வருகிறது.