அடிமை சாசனம் எழுதி கொடுத்த பழனிசாமி தி.மு.க.,வை விமர்சிப்பதா: அமைச்சர் துரைமுருகன்
அடிமை சாசனம் எழுதி கொடுத்த பழனிசாமி தி.மு.க.,வை விமர்சிப்பதா: அமைச்சர் துரைமுருகன்
UPDATED : மே 27, 2025 05:01 AM
ADDED : மே 27, 2025 04:49 AM

வேலுார் : ''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முதல்வராக இருந்தவர், எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர், இப்படி ஒரு குற்றச்சாட்டை கூறுவார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலுார் கலெக்டர் அலுவலகத்தில், அவர் அளித்த பேட்டி:
மேட்டூர் அணையிலிருந்து, ஜூன் மாதம் பாசனத்திற்காக கட்டாயம் தண்ணீர் திறக்கப்படும். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
கடும் நிபந்தனை
அவ்வழக்கில், பேபி அணை கட்டப்பட வேண்டும்; பராமரிப்பு பணிக்காக பொருட்களை எடுத்து செல்லும்போது, கேரள அரசு எந்தவிதத்திலும் தடங்கலும், தடையும் ஏற்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட, ஏழு கடும் நிபந்தனைகளை, கேரள அரசுக்கு, நீதிமன்றம் விதித்தது. அதையடுத்து, தமிழக அரசு சார்பில் பணிகள் துவங்கி உள்ளன.
'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்பதை போல், கர்நாடகாவை சேர்ந்தவர்கள், குப்பையைக் கொண்டு வந்து தமிழக ஆற்றில் கொட்டுகின்றனர்.
காங்கேயநல்லுார் பாலாற்றில் குப்பை கொட்டுவதால், தண்ணீரே கெட்டுப்போய் விட்டது.
வாணியம்பாடி, ஆம்பூர் பாலாற்றிலும் கழிவு கலக்கிறது; காவிரியிலும் கழிவு கலக்கிறது. இப்படிப்பட்ட மோசமான ஒரு நிலைமையை எப்படி எதிர்கொள்வது என புரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவரிடம், 'நானும் தலைவர் என, முதல்வர் டில்லி சென்றார். அவர் குடும்ப நிதியை காப்பாற்றச் சென்றார். ஊழலுக்கு முறையான தண்டனையை, தி.மு.க., அனுபவிக்கும்' என, பழனிசாமி கூறியிருக்கிறாரே என, நிருபர்கள் கேட்டனர்.
குற்றச்சாட்டு
அதற்கு பதிலளித்த துரைமுருகன், ''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முதல்வராக இருந்தவர், எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர், இப்படியொரு மோசமான குற்றச்சாட்டைக் கூறுவார் என, கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
''பா.ஜ.,வுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர், அடுத்தவர் பயணம் குறித்தெல்லாம் விமர்சிக்கத் தகுதியில்லை,'' என்றார்.