ADDED : பிப் 24, 2024 01:09 AM

தூத்துக்குடி, :திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழாவின் 10ம் நாளான நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
இக்கோயிலில் மாசி திருவிழா பிப்., 14 கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை மாலை சுவாமியும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். 10ம் நாளான நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6:30 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டு ரத வீதிகளை சுற்றி நிலைக்கு வந்தது.
பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர் காலை 7:20 மணிக்கு பக்தர்களால் வடம் பிடித்து இழுத்து வரப்பட்டது.
பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து தேர் ரத வீதிகளில் சுற்றி வந்து காலை 9:05 மணிக்கு நிலைக்கு வந்தது. தொடர்ந்து தெய்வானை அம்மன் எழுந்தருளிய தேர் காலை 9:15 மணிக்கு புறப்பட்டு ரத வீதிகளில் வலம் வந்தது. 11 வது நாளான இன்று (பிப்., 24) தெப்ப உற்ஸவம் நடக்கிறது.