கேரளாவில் 4 நாளில் துவங்குது பருவமழை; தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கேரளாவில் 4 நாளில் துவங்குது பருவமழை; தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ADDED : மே 20, 2025 02:24 PM

சென்னை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று (மே 20) கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த 4 அல்லது 5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது. மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா - வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
நீலகிரியில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.