புரோக்கர்கள் மீது நடவடிக்கை முதல்வருக்கு நர்ஸ்கள் சங்கம் கடிதம்
புரோக்கர்கள் மீது நடவடிக்கை முதல்வருக்கு நர்ஸ்கள் சங்கம் கடிதம்
ADDED : மே 27, 2025 04:28 AM

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் நர்ஸ்களுக்கு, கடந்த 22, 23ம் தேதிகளில் பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடந்தது.
இதில், முறைகேடு நடந்ததாகவும், தென் மாவட்ட மருத்துவமனைகளில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு மாறுதல் பெற, 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகவும், மலர்விழி, வசந்தி என்ற நர்ஸ்கள் பெயரில் கடிதங்கள் வெளியாகின.
இக்கடிதம், லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், நர்ஸ்களின், 'வாட்ஸாப்' குழுவிலும் அதிகம் பகிரப்பட்டது.
இந்நிலையில், சிவகங்கையில் மலர்விழி என்ற பெயரில், நர்ஸ் யாரும் இல்லை என, மருத்துவ ஊரக நல பணிகள் இயக்குனரகம் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, அரசின் மீது அவப்பெயரை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசு பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சியில் உள்ள நர்ஸ்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவர் பூமிநாதன், தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம்:
அ.தி.மு.க., ஆட்சியில், தென்மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு, நர்ஸ்கள் பணியிட மாறுதல் பெற, 5 முதல் 15 லட்சம் ரூபாய் வரை, புரோக்கர்கள் வாயிலாக வசூலிக்கப்பட்டது.
தற்போது, வெளிப்படையாக கவுன்சிலிங் நடப்பதால், அப்போது பலன் அடைந்த புரோக்கர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
எனவே, மருத்துவம், ஊரக பணிகள் நல இயக்குனரகம் மற்றும் தி.மு.க., அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், போலியான பெயர்களை பயன்படுத்தி கடிதங்களை உலா விடுகின்றனர்.
அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.