ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்: விஜயேந்திரர் அருளாசி
ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்: விஜயேந்திரர் அருளாசி
ADDED : ஜூலை 04, 2025 12:15 AM

சென்னை, ''ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். நவீன பாடத் திட்டங்களை மாணவர்கள் கற்று பயனடைய வேண்டும்,'' என, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் அருளாசி வழங்கினார்.
நாடு முழுதும் ஆன்மிகத்தை பரப்பவும், வளர்க்கவும், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், இம்மாதம் 1ம் தேதி முதல் விஜய யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
நேற்று காலை, பம்மலில்உள்ள சங்கர வித்யாலயாவிற்கு விஜயம் செய்தார். அங்கு பக்தர்களை ஆசிர்வதித்தார்.
கிழக்கு தாம்பரம் சங்கர வித்யாலயா பள்ளி, 50ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, அங்கு விஜயம் செய்த விஜயேந்திரர், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களை ஆசிர்வதித்தார்.
பின், விஜயேந்திரர் அருளாசி வழங்கியதாவது:
ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள், தேசம் முழுதும்கல்விச்சாலைகள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், சேவை மையங்களை துவக்கி வைத்தார். அவை, தற்போது சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன.
நம் கலாசாரம், நாட்டின் தேச பக்தியுடன் சேர்த்து, நவீன பாடத் திட்டங்களை கற்று, மாணவர்கள் பயனடைய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு அவர் அருளாசி வழங்கினார்.
இன்று, பம்மலில் தங்கி பூஜைகள் நடத்தி, பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். வரும், 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை, பெரியபாளையம் அடுத்த தண்டலம், சங்கரா பள்ளிக்கு விஜயம் செய்கிறார். பின், அங்கிருந்து திருப்பதி செல்ல உள்ளார்.