தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
ADDED : மே 19, 2025 11:48 AM

மயிலாடுதுறை: தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து பெருமாளை சேவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரழுந்தூரில் செங்கமல வல்லி தாயார் சமேத ஆமருவியப்பன் கோவில் உள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும், திருமங்கை ஆழ்வாரால் 45 பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான இந்தக் கோவிலின் வைகாசி பெருவிழா கடந்த 10ம் தேதி பூர்வாங்க பூஜைகள், 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25ம் தேதி வரை 16 நாட்கள் நடைபெறுகிறது.
விழாவில் 9ஆம் நாள் திருவிழாவான தேரோட்டம் இன்று காலை ரிஷப லக்கனம், திருவோண நட்சத்திரத்தில் நடைபெற்றது தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனத்திற்கு பிறகு தாயார் சமேயதராய் ஆமருவியப்பன் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
அப்போது பட்டாச்சாரியார்கள் மகா தீபாராதனை காண்பித்த பின்னர் திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டனர். பின்னர் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலில் நான்கு வீதிகளையும் வலம் வந்த போது அப்பகுதி மக்கள் பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபாடு நடத்தினர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலானோர் செய்திருந்தனர்.