போர் எதிரொலி: மாலத்தீவுக்கு இஸ்ரேல் நாட்டினர் செல்ல தடை
போர் எதிரொலி: மாலத்தீவுக்கு இஸ்ரேல் நாட்டினர் செல்ல தடை
ADDED : ஜூன் 03, 2024 03:04 PM

மாலே: இஸ்ரேல் நாட்டினர் யாரும் தங்கள் நாட்டுக்குள் வரக் கூடாது என மாலத்தீவு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நீடித்து வருகிறது. இதனால், காசாவில் வசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். அண்மையில், ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டினர் யாரும் தங்கள் நாட்டுக்குள் வரக் கூடாது என அதிபர் முய்சு தலைமையிலான மாலத்தீவு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், மாலத்தீவில் இருக்கும் தங்கள் குடிமக்கள் வெளியேறுமாறு, இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாலத்தீவுக்கு வருகை தரும் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது என ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.