ஜெலன்ஸ்கியை புடின் ஆக்கிய பைடன்: மேடையில் மீண்டும் உளறல்
ஜெலன்ஸ்கியை புடின் ஆக்கிய பைடன்: மேடையில் மீண்டும் உளறல்
ADDED : ஜூலை 12, 2024 01:32 PM

வாஷிங்டன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி என சொல்வதற்கு பதில், புடின் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இதைக்கேட்ட ஜெலன்ஸ்கி புன்னகைத்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடன், வயது முதிர்வு காரணமாக தனது பேச்சில் தடுமாறி வருகிறார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப்புடனான விவாதத்தின் போது, பைடன் சரியான பதிலடி கொடுக்கவில்லை என விமர்சனம் எழுந்தது. இதனையடுத்து அவரை மாற்ற வேண்டும் என அவரது கட்சிக்குள் கோரிக்கை எழுந்தது. ஆனால் இதனை நிராகரித்த பைடன், போட்டியில் இருந்து விலக மாட்டேன் எனக்கூறியுள்ளார்.
நேடோ மாநாட்டில் பேசிய பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் என்பதற்கு பதில் டிரம்ப் பெயரை சொல்லி, அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பிறகு அதனை சரி செய்தார்.
இந்நிலையில், அடுத்ததாக நேடோ மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அறிமுகப்படுத்தி பேசிய அதிபர் பைடன்,ஜெலன்ஸ்கி என சொல்வதற்கு பதில் உக்ரைன் அதிபர் புடின் என இரண்டு முறை தவறாக சொன்னார். இதைக்கேட்டு பக்கத்தில் நின்றிருந்த ஜெலன்ஸ்கி புன்னகைத்தார். பிறகு தவறை சரி செய்து கொண்டு ஜெலன்ஸ்கி என்றார்.
இது தொடர்பாக அந்த மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜெர்மன் சான்சிலர் ஓலப் ஸ்கால்ஜ் கூறுகையில், அனைவருக்கும் நாக்கு குழறுவது இயற்கை தான் என்றார்.
பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் கூறுகையில், ‛‛ பைடன் நல்ல ‛ பார்மில் ' உள்ளார் என்றார்.