இதை செய்யாவிட்டால் காசாவை கைப்பற்றுவோம்: ஹமாஸ்க்கு இஸ்ரேல் எச்சரிக்கை
இதை செய்யாவிட்டால் காசாவை கைப்பற்றுவோம்: ஹமாஸ்க்கு இஸ்ரேல் எச்சரிக்கை
ADDED : மார் 20, 2025 07:04 AM

ஜெருசலேம்: 'ஹமாஸ் அதிகாரத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் இஸ்ரேல் காசாவைக் கைப்பற்றும்' என இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரூவன் அசார் கூறியதாவது: காசாவில் ஹமாஸ் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துகிறது. காசாவை விட்டு வெளியேறாவிட்டால் இஸ்ரேல் ராணுவத்தின் முழு பலத்தையும் ஹமாஸ் எதிர்கொள்ளும். ஹமாஸ் அதிகாரத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் இஸ்ரேல் காசாவைக் கைப்பற்றும்.
மீதமுள்ள பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க இஸ்ரேல் நீண்ட காலமாக காத்திருக்கிறது. எங்கள் பிணைக்கைதிகளை திரும்பப் பெறுவதற்கும் இந்த மோதலுக்கு ராஜதந்திர தீர்வைப் பெறுவதற்கும் ராணுவ அதிகாரத்தை பயன்படுத்துவோம். காசா மக்களுக்கு உதவக்கூடிய மிதமான தலைமை மற்றும் சர்வதேச பங்குதாரர்களிடம் அதிகாரத்தை மாற்ற இஸ்ரேல் உதவும்.
காசாவை விட்டு பாலஸ்தீனியர்களை முழுமையாக வெளியேற இஸ்ரேல் கேட்கவில்லை. நாங்கள் செய்வது என்னவென்றால், ஹமாஸ் அமெரிக்க திட்டங்களை ஏற்கவில்லை என்றால், நாங்கள் அந்தப் பகுதியைக் கைப்பற்றப் போகிறோம். துரதிர்ஷ்டவசமாக, ஹமாஸ் தலைவர்கள் பொதுமக்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். காசாவில் உள்ள முழு பாலஸ்தீன மக்களையும் ஹமாஸ் சிறைபிடித்து வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.